சிவனருள் பெற்ற அடியார்கள் – 23


திருவையாறு அப்பர் கைலாயக் காட்சி...

திருவாரூரில் அவதரித்த திருநாவுக்கரசர், அப்பர், மருள்நீக்கியார் என்று பல பெயர்களால் அறியப்படுகிறார். சகல கலை வல்லுநராகத் திகழ்ந்த இவர் தொண்டை நாட்டைத் தூய்மைப்படுத்தியவர். சிவபெருமானின் உண்மை நெறியறத்தை உலகுக்குத் தரும் பொருட்டு அவதரித்தவர் இவர்.

அப்பர்

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாரூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த புகழனார் - மாதினியார் வசித்து வந்தனர். இவர்களுக்கு திலகவதியார் என்ற பெண்ணும், மருள்நீக்கியார் என்ற மகனும் உண்டு. திலகவதியாருக்கு கலிப்பகை நாயனார் என்ற சேனாதிபதியுடன் திருமணம் நிச்சயமான நிலையில், போருக்குச் சென்ற கலிப்பகை நாயனார் உயிரிழந்தார்.

புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து உயிர் நீத்தனர். மனம் உடைந்த திலகவதியாரும் உயிர் துறக்க எண்ணினார். இருப்பினும் தம்பி மருள்நீக்கியாரை கவனித்துக் கொள்ளும் பொருட்டு, அவரது முடிவை மாற்றிக் கொண்டார். இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டே அறவாழ்வு வாழ்ந்து வந்தார் திலகவதியார். தமக்கையைப் போலவே மருள்நீக்கியாரும் சமுதாயப் பணிகளை மனம் உவந்து செய்து வந்தார்.

வடநாட்டில் உள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியார், சமண மதத்தில் இணைக்கப்பட்டார். அவருக்கு தருமசேனர் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதையறிந்த திலகவதியார், அவரை சைவ சமயத்துக்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார். ஈசனும் அவ்வாறு செய்வதாக உறுதியளித்தார்.

அப்பர்

தருமசேனருக்கு வயிற்றில் சூலை நோய் வந்தது. இந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டனர். ஆனால், நோய் குணமாகவில்லை. தனது தமக்கையின் நினைவு வர, அவருக்கு செய்தி சொல்லி அனுப்பி, திலகவதியாரின் திருவதிகை மடத்துக்குச் சென்றார் தருமசேனர். திலகவதியார் தம்பிக்கு தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். அங்கு தருமசேனர், ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது.

திருப்பதிகம் கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், தருமசேனரை ‘நாவுக்கரசு’ என்று அழைத்தார். சிவபெருமானின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தார் நாவுக்கரசர். மனம், வாக்கு, காயம் மூன்றாலும் ஈசனை வழிபட்டார். கோயில்களில் புதர்களை நீக்கி உழவாரப் பணி செய்தார். தன்னை இறைவனின் அடிமையாகவே கருதினார் நாவுக்கரசர்.

சமண மதத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாறிவிட்ட நாவுக்கரசர் மீது சமணர்கள் கோபம் கொண்டனர். நாவுக்கரசரைப் பற்றி அவதூறாக மன்னரிடம் முறையிட்டனர். மன்னரின் உத்தரவுப்படி நாவுக்கரசர் இழுத்து வரப்பட்டபோது, ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற பதிகத்தைப் பாடினார்.

அப்பர்

சுண்ணாம்பு சுடும் நீற்றறையில், நாவுக்கரசர் தள்ளப்பட்டபோது, ‘மாசில் வீணையும்’ என்ற திருக்குறுந்தொகையைப் பாடினார். ஏழு நாட்கள் கழித்து பார்க்கும்போது, எவ்வித பாதிப்பும் இன்றி நாவுக்கரசர் இருந்ததைக் கண்டு சமணர்கள் திகைத்தனர். இதைத் தொடர்ந்து, நாவுக்கரசருக்கு கொடிய நஞ்சு ஊட்டப்பட்டது. அதுவும் பயனற்றுப் போனது. யானையை விட்டு நாவுக்கரசரை மிதிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், யானை அவரை வலம் வந்து வணங்கிச் சென்றது.

நாவுக்கரசர் உடலுடன் கல்லைக் கட்டி, கடலில் எறியப்பட்டார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே’ என்ற பதிகத்தைப் பாடினார் நாவுக்கரசர். கல் கடல் மீது மிதந்து, திருப்பாதிரிப்புலியூரை அடைந்தது. நாவுக்கரசர் அங்குள்ள ஈசனையும் அம்பாளையும் பாடி சில காலம் தங்கியிருந்தார்.

திருவையாறு

திருவதிகை திரும்பிய நாவுக்கரசர், பல பதிகங்களை பாடினார். பல திருத்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். திருப்பெண்ணாடகத்தில் உள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவனிடம் தனது உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறிக்க வேண்டினார். ஈசனும் அவ்வாறு அருளினார். தில்லை முதலிய தலங்களுக்குச் சென்று ஈசனை வணங்கிய நாவுக்கரசர், சீர்காழி சென்று திருஞானசம்பந்தரை சந்தித்து அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். திருஞானசம்பந்தரால் நாவுக்கரசர் ‘அப்பர்’ என்று அழைக்கப்பட்டார்.

நாவுக்கரசரும், சம்பந்தப் பெருமானும் திருமடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து சிவபிரானைப் பாடி களித்தனர். இருவரும் சேர்ந்து பல தலங்கள் சென்று தரிசித்தனர். சம்பந்தர் சீர்காழி திரும்பினார். நாவுக்கரசர் பல தலங்கள் சென்று தரிசனம் செய்த பின்னர் திங்களூரைச் சென்றடைந்தார். அப்பூதியடிகளாப் பற்றி கேள்வியுற்று அவரது இல்லத்துக்கு உணவருந்தச் சென்றார். அப்பூதியடிகளாரின் மூத்த புதல்வனை அரவம் தீண்ட, அச்சிறுவனை ஆபத்தில் இருந்து மீட்டார்.

திருவாரூர்

திருப்புகலூர் தலத்தில் முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார், நீலநக்க நாயனார், சம்பந்தப் பெருமான் போன்ற அடியார்களை சந்தித்தார் நாவுக்கரசர். பின்னர் சம்பந்தருடன் திருவீழிமிழலை சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டார். இறைவன் தினமும் ஆளுக்கொரு படிக்காசு அளித்தார். இருவரும் திருமறைக்காடு சென்று நெடுநாட்களாக பூட்டிக் கிடந்த கோயில் கதவுகளை தினமும் திறந்து மூடும்படி பதிகம் பாடினர்.

திருப்பழையாறையில் உள்ள வடதளி என்ற சிவன்கோயிலில் சிவலிங்கம் மூடி மறைக்கப்பட்டு, சமண விமானமாக மாற்றப்பட்டிருந்ததை அறிந்த நாவுக்கரசர், அதை மீண்டும் சிவன் கோயிலாக மாற்றினார். திருப்பைஞ்ஞீலி, திருக்காளத்தியை தரிசித்த பின்னர், வடகையிலையை நோக்கி நாவுக்கரசர் புறப்பட்டார். வழியில் ஸ்ரீசைலம், மாளவம், காசி போன்ற தலங்களை தரிசித்தார். வயது முதிர்ந்த காரணத்தால், நடக்க முடியாமல் தவித்தார் நாவுக்கரசர்.

அப்போது நாவுக்கரசர் முன்னர், இறைவனே முதியவர் வேடத்தில் தோன்றி, தான் உருவாக்கிய பொய்கையில் அவரை மூழ்கும்படி பணித்தார். இறைவனின் உத்தரவுப் படி பொய்கையில் மூழ்கிய நாவுக்கரசர், திருவையாற்றில் எழுந்தார். அங்குள்ள கோயிலை கையிலையாகக் கண்டார். அங்கு பலநாட்கள் தங்கி சிவப்பணி செய்தார். பாண்டி நாட்டு பெருமையை சம்பந்தர் வாயிலாக கேட்டறிந்த நாவுக்கரசர் அங்கு சென்று பல தலங்களை தரிசித்தார்.

அப்பர்

நிறைவில் திருப்புகலூர் வந்தடைந்த நாவுக்கரசர், ஈசனை தரிசித்து சித்தநிலை கொண்டார். காணும் பொருள் அனைத்தும் சிவம் என்று இருந்த அப்பர் சுவாமிகள், ஒரு சித்திரை மாதம் சதய நட்சத்திர தினத்தில் சிவனடி சேர்ந்தார்.

‘திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 22

x