தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுர சிலை உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து சிறிய கோபுரங்களுடன் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாலா மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்டோர் காலகட்டத்தில் இந்த கோயில் படிப்படியாக கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கும் நிலையில் 171 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலை அமைந்துள்ளது. இதனிடைய திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பிரம்மன் சிலையின் மார்பு பகுதி உடைந்து இன்று காலை கீழே விழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு, அண்ணாமலையார் திருக்கோயிலின் ராஜகோபுரத்தின் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வல்லுனர் குழுக்களை கொண்டு அவற்றை சரி செய்தனர். இதேபோல் அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அதுவும் சரி செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் கோபுரங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு குடமுழுக்கும் நடைபெற்று இருந்தது. இந்நிலையில் கோயிலின் கோபுரத்தில் இருந்த சிலை ஒன்று உடைந்து விழுந்து உள்ள சம்பவம், பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.