பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்து பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் இன்று (செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கட லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையிலும் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) ஆகிய 2 தினங்களிலும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 5.56 மணிக்கு தொடங்கி, நாளை காலை 6.07 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.