ஸ்ரீரங்கம்: சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோல திருப்பதி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர். இதைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 12-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முதல் பகல்பத்து திருநாள் நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தின் கடைசி நாளான நேற்றைய தினம் காலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

x