திருமலை திருப்பதியில் ஏழுமலையானுக்கு பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை திருவேங்கடத்தான் திருமலையில் உதித்த புரட்டாசி திருவோண திருநட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையான் தனக்கு உற்சவங்கள் நடத்தும்படி பிரம்மதேவருக்கு உத்தரவிட்டார். அதன்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம் என்பதால் இது பிரம்மோற்சவம் எனப்படுகிறது.
பிரம்மா வீதியுலா
இதனை அறிவிக்கும் வகையில் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் வீதியுலா காணும்போது, வாகனங்களுக்கு சற்று முன்பாக பிரம்ம ரதம் என்று சிறிய தேர் இழுத்துச் செல்லப்படும். பிரம்மா இந்த தேரில் அமர்ந்து, பெருமாள் வீதியுலா வரும் மாடவீதிகளை சோதித்துப் பார்ப்பதாக ஐதீகம். அதன்பிறகே வாகனங்கள் மாடவீதிகளில் புறப்பாடாகும். மற்ற பெரிய திருக்கோயில்களில் வாகன புறப்பாடுக்கு முன்பாக சீவேலி என்ற சிறிய பல்லக்கை சுமந்து வருவார்கள். அதில் சக்கரத்தாழ்வார் வீற்றிருப்பார். ஆனால், பிரம்மா வீற்றிருக்கும் சிறிய பிரம்ம ரதத்தை இழுத்துவரும் வழக்கம் திருமலையில் மட்டுமே உள்ளது.
இரண்டு பிரம்மோற்சவம்
தமிழ் பஞ்சாங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி அல்லது மார்கழி மாதம் கூடுதல் நாட்கள் வருவது வழக்கம். அதுபோல் தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசியில் கூடுதல் நாட்கள் வரும். அதனை முன்னிட்டு புரட்டாசியில் தொடக்கத்தில் வரும் திருவோணத்தன்றும், அதே புரட்டாசியில் நவராத்திரியின்போது வரும் திருவோணத்தன்றும் திருமலையில் இரண்டு பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்படும்.
அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டு புரட்டாசி தொடக்கத்தில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றமாகி, வரும் 26-ம் தேதி திருவோணத்தன்று நிறைவுறும் வகையில் முதல் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. புரட்டாசி இறுதியில் நவராத்திரியின்போது திருவோணம் நட்சத்திர நாளில் நிறைவுறும் வகையில், வரும் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை ஒன்பது நாட்கள் இரண்டாவது பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.
இவ்விரு விழாக்களின் போதும் வாகன புறப்பாடு அந்தந்த நாட்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருக்கொடியேற்றம், திருக்கொடியிறக்கம், மரத்தாலான பெரிய தேரோட்டம் ஆகியவை நடைபெறாது. எனினும் இவ்விழாவும் ஒன்பது நாட்களே நடைபெறுகிறது. எட்டாம் நாளன்று மரத்தேருக்கு பதிலாக தங்கத்தேரில் சுவாமி வீதியுலா வருவார். வழக்கம்போல் ஒன்பதாம் நாளன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
மாதாமாதம் கருட சேவை
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஏழுமலையான் கருட சேவை கண்டருள்வது வழக்கம். மற்ற நாட்களை விட கருட சேவையை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்விழாவின் போது மட்டுமின்றி, மாதந்தோறும் பெளர்ணமி நாளன்றும் கருட சேவை நடைபெறுகிறது. அப்போது அதிக கூட்டமின்றி, மலையப்ப சுவாமியை நாம் தரிசிக்கலாம்.
திருக்குடை
பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளன்று பெரிய மரத்தாலான தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி பவனி வருவார். வழக்கமாக தேரின் உச்சியில் கலசமும், அதனுடன் சேர்ந்து திருக்குடையும் இடம்பெற்றிருக்கும். தேரை அலங்கரிக்கும் போது இவற்றை கலைஞர்களே சேர்த்து அலங்கரித்து விடுவர்.
ஆனால் திருமலையைப் பொறுத்தவரை மரத்தேரின் உச்சியில் தங்கத்தாலான திருக்குடை கட்டப்பட்டிருக்கும். தேரோட்டத்துக்கு முதல் நாள் அதாவது ஏழாம் திருநாளன்று, இந்த தங்கத் திருக்குடையை அலங்கரித்து, மேளதாளம் முழங்க மாடவீதி வலம் வருவார்கள். அதன் பிறகே தேரின் உச்சிக்கு அதனைக் கொண்டு சென்று கலசத்தோடு சேர்த்து கட்டுவார்கள். மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.
கலைநிகழ்ச்சிகள்
திருமலையப்ப சுவாமி வாகன புறப்பாட்டுக்கு முன்பாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண், பெண் கலைஞர்கள் பங்கேற்கும் நடனம், பாட்டு, இசைக்கருவி, பல்வேறு கடவுளர் வேடம் அணிந்து நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பிரம்மோற்சவத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேவஸ்தானம் சார்பில் கலைநிகழ்ச்சி நடத்த குறிப்பிட்ட தேதியில் நேரம் ஒதுக்குவார்கள். அந்நாளில் சுவாமிக்கு முன்னதாக கலைநிகழ்ச்சியை நடத்தலாம்.