மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை மாநகரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று கூடலழகர் கோயில். பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்றெ்ற சிறப்புக்குரிய தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கூடலழகர் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா இன்று காலையில் 10.10 மணிக்குமேல் 10.55 மணிக்குள் பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
தினமும் காலை பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமார் வாகனம், கருடன், சேஷ வாகனம், யானை, பூச்சப்பரம், குதிரை வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். அதனைத்தொடர்ந்து முக்கிய விழாவான 9-ம் நாள் (மே 24)தேரோட்டம் நடைபெறும்.
10-ம் நாள் (மே 25) எடுப்புச் சப்பரம், தேர் தடம்பார்த்தல் நிகழ்வும் நடைபெறும். 11-ம் நாள் மே 26-ல் தீர்த்தவாரி முடிந்து காலை 10.15 மணிக்குமேல் குதிரை வாகனத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி மேலமாசி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வைகைஆற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அன்றிரவு விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
12-ம் நாள் மே 27-ல் காலை 8 மணிக்கு கருடவாகனத்தில் ராமராயர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு பனகல் சாலை, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சன்னதி தெரு வழியாக தெற்காவணி மூல வீதியிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருள்கிறார். அன்று இரவு 7 மணிக்குமேல் குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுகிறார்.
13ம் நாள் மே 28-ல் விடையாற்றி உற்சவம், 14-ம் நாள் மே 29-ல் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் லெ.கலைவாணன் தலைமையில் உதவிஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.