வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையை அணிந்து நடனம் ஆடிய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழிஞ்சூர் பகுதியில் கடந்த 21-ம் தேதி மாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில் கழிஞ்சூரை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் அருண்குமார் (23) என்பவர் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையை அணிந்து சினிமா பாடலுக்கு அவரது நண்பர்களுடன் சேர்த்து நடனம் ஆடினார்.
இது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஆசிர் தங்கராஜ் இது குறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் அவர்கள் அணியும் ஆடையை அணிந்து, கலகம் மற்றும் கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் அளித்த புகாரின் பேரில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி மற்றும் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் தலைமையிலான காவல் துறையினர், இஸ்லாம் பெண்கள் அணியும் ஹிஜாப்பை அணிந்து இரு மதங்களுக்குகிடையே வெறுப்பை தூண்டும் வகையில் நடனம் ஆடிய அருண்குமாரை கைது செய்து வேலூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.