விநாயகர் சிலை ஊர்வலம்... சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு!


விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீஸார் அனுமதி அளித்துள்ள நிலையில் அசம்பாவிதங்களைத் தடுக்க 18,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸார் குவிப்பு

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றும், நாளையும் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். இன்றைய தினம் பாரதிய சிவசேனா அமைப்பினரும், நாளைய தினம் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கவுள்ளனர்.

சதுர்த்தி ஊர்வலம்

இந்த நிலையில், சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

x