வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை தரிசித்து, பரமபத வாசலை அடைந்தால் நம் பாவங்கள் அனைத்தும் பனி போல் கரைந்தோடி விடும் என்பது ஐதீகம். இம்மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.38 மணி வரை தசமி திதி. அதன் பின்னர் ஏகாதசி திதி தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், விரதமிருந்து பெருமாளை தரிசித்தால், முக்தி நிச்சயம்.
ஒரு வைகுண்ட ஏகாதசி நாளில் தான், நம்மாழ்வார் பரமபதம் அடைந்தார். வைணவத்தின் தலைநகராகப் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி நாளில் ரங்க தரிசனம் மேற்கொண்டால் ஏழு ஜென்ம பாவங்களும் விலகிடும்!
ஸ்ரீரங்கத்தில் வருடந்தோறும் இருபது நாட்கள் ‘அத்யயன உற்சவம்’ நடைபெறுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை செவிமடுக்கவே திருமங்கை ஆழ்வாரால் இந்த அத்யயன உற்சவம் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறது தல புராணம்.
இப்போது - திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக பகல் பத்து விழாவும் வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்து ராப்பத்து விழாவும் நடைபெறும். இதையொட்டி தினமும் சர்வ அலங்காரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா என விழா அமர்க்களப்படும்.
பகல் பத்து விழாவுக்கும், இராப் பத்து விழாவுக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி பாடப்பட்டு இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சி நடைபெறும்.
மார்கழி மாதத்தில் அரங்கனை என்றேனும் ஒருநாள் தரிசிப்பது சிறப்பு. சொர்க்கவாசல் திறப்பின் போது தரிசிப்பது மகா புண்ணியம்.
மார்கழி மாத ஏகாதசி நாளில் விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதத்தை நிறைவு செய்யவேண்டும். அதேபோல், வைஷ்ணவத்தில் பெரியகோயில் என்று போற்றப்படுகிற ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு, வைகுண்ட ஏகாதசி நன்னாளில், பரமபதவாசலில் நம் பார்வையும் பாதமும் படவேண்டும். ரங்கனின் திருவடியில் நமக்கும் இடமுண்டு.
’ரங்கா... ரங்கா... ’ என அரங்கனை அன்புருக அழைப்பவர்களுக்கு அதன் பின்னர் வாழ்க்கையில் வசந்தம் தான்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!
அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!