நந்தியின் ஆணவத்தை அடக்கி சிவன் குரு பகவானாக விளங்கும் மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பகுத்தறிவு பேசி கடைபிடித்தாலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மிகத்தில் மிகுந்த பற்று உள்ளவராக திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கு சென்று கிரக பரிகாரங்களையும், சிறப்பு வழிபாடுகளை செய்து வருபவர் துர்கா ஸ்டாலின்.
அந்தவகையில் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். இந்த கோயில் நந்தியின் ஆணவத்தை சிவன் பெருமான் அடக்கி பின் குருவாக எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.
இதேபோல, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். வதான்யேஸ்வரர், மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று இரு கோவில்களிலும் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார் என துர்கா ஸ்டாலின் தரப்பில் இருந்துக் கூறப்படுகிறது.