கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா!


கொடியேற்றும் தீட்சிதர்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களின் போது மூலவரான நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.

அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா திருவிழாவுக்கான கொடியேற்று விழா இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று காலை உற்சவ கொடிமரத்திற்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கோயில் வளாகத்தில் உள்ள உற்சவ கொடிமரத்தில் வேத, மந்திரங்கள் முழங்க உற்சவ ஆச்சார்யார் மீனாக்ஷிநாத தீட்சிதர் கொடியேற்றினார்.

அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 26ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 27ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும் நடைபெற உள்ளது. பின்புமதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.

அதைதொடர்ந்து 28ம் தேதி முத்துப் பல்லக்கில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

x