அழகருக்கு 2 ஆயிரம் மூட்டை நெல் காணிக்கை; பக்தர்கள் தாராளம்!


பக்தர்கள் காணிக்கை அளித்த நெல் மூடைகள்

மதுரை அழகர் கோயிலுக்கு இந்த ஆண்டு சுமார் 2 ஆயிரம் மூட்டை நெல் மணிகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

கள்ளழகர் திருக்கோயில்

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி, நேர்த்திக் கடனாக தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளையும் கள்ளழகர் என்ற சுந்தரராஜா பெருமாளுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதற்காக நெல்மணிகளை கொட்டி வைக்க தனி இடமும் அழகர் ஆலயத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 830 கிலோ (2 ஆயிரம் மூட்டைகள்) நெல்மணிகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். அதனை அளவீடு செய்து ஏலம் விடும் பணியில் கடந்த ஒரு வாரமாக கோயில் நிர்வாகத்தினர் செய்து வந்தனர்.

இதில் கோயிலுக்கு வருவாயாக ரூ.20 லட்சத்து 61 ஆயிரத்து 280 கிடைத்துள்ளது. முந்தய ஆண்டு ஒரு லட்சம் கிலோ நெல்மணிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ நெல்மணி கூடுதலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

x