ஆசியாவிலேயே 2வது உயரமான சிலை... 2 டன் மலர்களால் புலியகுளம் விநாயகர் அலங்கரிப்பு


புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து விநாயகர் அலங்காரத்தை பார்த்து வழிபட்டு சென்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 11 விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, இறுதியாக சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டது. பின் 2 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டது.

ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலை

புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும்.19 அடி உயரத்தில், பத்து அடி அகலத்தில் 190 டன் எடை கொண்ட இந்த விநாயகர் சிலைக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் ஒரு மணி நேரம் பூக்களால் அலங்காரம் நடைபெற்ற நிலையில் ஏராளமான பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து விநாயகரை வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புறநகர் பகுதியில் 1611 விநாயகர் சிலைகள், மாநகர் பகுதிகளில் 680 விநாயகர் சிலைகள் உட்பட 2300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

x