ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்லாயிரம் விநாயகர் உருவங்களை வைத்து, அவரின் தீவிர பக்தை பூஜை செய்ய உள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ். ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரான இவரின் மகள் விஷாலி மஞ்சுபாஷினி. இவர் சிறுவயது முதல் விநாயகரின் தீவிர பக்தை. இதன் காரணமாக எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் விநாயகர் படங்கள், சிலைகள், போர்வைகள், உலோக உருவங்கள், கீ-செயின்,, வளையல், கம்மல், செயின் என அனைத்தையும் வாங்கி விடுவார்.
இவர் வீட்டில் விநாயகர் உருவங்களை வைப்பதற்காகவே தனி அறை உள்ளது. அதில், கடந்த, 15 ஆண்டுகளில், பல்லாயிரம் விநாயகர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பூஜை நடக்கிறது. இது குறித்து விஷாலி மஞ்சுபாஷினி கூறுகையில்,'' கடந்த, 2008ல் எனது வீட்டில் எதிர்பாராத விதமாக விநாயகர் சிலை விழுந்த போது, அங்கிருந்த விநாயகர் சிலையின் கையை பிடித்ததால் நான் பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டேன். அன்று முதல் விநாயகர் பக்தையானேன். அன்று முதல் விநாயகர் உருவங்களை சேகரிக்க துவங்கினேன். தற்போது, எனது வீட்டில், 12 ஆயிரம் விநாயகர் உருவங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. நான் எங்கு சென்றாலும் விநாயகர் உருவங்களை மட்டும் தான் தேடி வாங்கி வருவேன்'' என்கிறார்.