நெகிழ்ச்சி... விநாயகர் சதுர்த்திக்காக மிலாது நபி ஊர்வலத்தை ரத்து செய்த முஸ்லிம் அமைப்புகள்!


ஹைதராபாத் மிலாது நபி ஊர்வலம்.

ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக மிலாது நபி ஊர்வலத்தை இஸ்லாமிய அமைப்புகள், ரத்து செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிலாது நபி ஊர்வலத்தில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த ஊர்வலம் தர்கா குவாத்ரிசமனில் தொடங்கி மொகல்புராவில் நிறைவடையும். நகரத்தைச் சுற்றி ஆங்காங்கே நடத்தப்படும் சிறிய ஊர்வலங்கள், பெரிய ஊர்வலத்துடன் இணையும்.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், வரும் செப்.28-ம் தேதி ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு ஊர்வலங்கள் நடைபெறுவதை அறிந்த தெலங்கானா போலீஸார் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்திற்காக மிலாது நபி ஊர்வலத்தை ரத்து செய்வதாக இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சன்னி யுனைடெட் ஃபோரம் ஆஃப் இந்தியா (எஸ்யூஎஃப்ஐ) அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முன்னோடியாக விளங்கும் வகையில் நடைபெறும் வருடாந்திர மிலாது உன் நபி ஊர்வலத்தை ரத்து செய்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகரத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த அறிவிப்பு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x