15 அடி உயரம், 650 கிலோ எடையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பிள்ளையாரை புதுச்சேரியில் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
வரும் 18ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. எனவே அனைத்து இடங்களிலும் சிலை செய்யும் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது. அப்படி செய்யப்படும் விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில், புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்திரா காந்தி மேல்நிலைப் பள்ளியின் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவின் ஆலோசனையின் பேரில் ரசாயன கலப்பில்லாமல் காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலை உருவாக்க உள்ளனர்.
ஊர் மக்களிடம் இருந்து 450 கிலோ செய்திதாள்களை சேகரித்து, 200 கிலோ பசை கொண்டு 4 மாத உழைப்பின் பலனாக 650 கிலோ விநாயகர் சிலையை இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த சிலை விநாயகர் கித்தார் வாசிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
ரசாயன கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் போது கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே அதனை தவிர்க்கும் பொருட்டு காகித விநாயகரை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டு அதன் அடிப்படையில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 15 அடிகள் உயரம், 650 கிலோ எடையில் கொண்ட விநாயகருக்கு வரும் 18ஆம் தேதி பிரதிஷ்டை செய்து விழா நடைபெறுகிறது.