தமிழகத்தில் அதிசயங்கள் மிகுந்த 11 விநாயகர் திருத்தலங்கள்


அமாவாசை அல்லது பெளர்ணமியில் இருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதி வருகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்நாளே விநாயகர் சதுர்த்தி எனப்படுகிறது.

மாதாந்திரம் பெளர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. அதிலும் இந்நாள் செவ்வாய் அன்று வருமானால் அதற்கு மகா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் ஓராண்டுக்கு விரதம் இருப்பவர்கள் பல்வேறு புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள்.

பிரணவத்தின் வடிவமாக அவதரித்தவர் விநாயகர். அனைத்து வழிபாட்டு முறைகளிலும், அனைத்து தேசங்களிலும் விநாயகர் வழிபாடு பல்வேறு முறைகளில் பின்பற்றப்படுகிறது. சைவத்தில் சிவபெருமானின் குழந்தையாக போற்றப்படுகிறார். வைணவத்தில் பெருமாளின் அடியாராக போற்றப்படுகிறார். சிவத்தலங்கள், சக்தி தலங்கள் மற்றும் முருகத்தலங்களில் நுழைவு வாயிலிலும், கன்னி மூலையிலும் விநாயகர் சன்னதி அமைந்திருக்கும். அதுபோல், வைணவ திவ்யதேசங்கள் பலவற்றிலும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. அங்கு நெற்றியில் திருமண் அணிந்து, ‘தும்பிக்கை ஆழ்வார்’ சன்னதி என்ற பெயரில் விநாயகர் வீற்றிருப்பதைக் காணலாம்.

கல், மண், மஞ்சள், சந்தனம், பசுஞ்சாணம், உலோகங்கள் என எந்தவொரு பொருளில் எழுந்தருளச் செய்தாலும், அவற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு வரங்களைத் தருபவர் விநாயகமூர்த்தி.

தமிழகத்தில் அதிசயங்கள் மிகுந்த 11 விநாயகர் திருத்தலங்களை இன்று தரிசிப்போம்.

பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர்

கற்பக விநாயகர்

விநாயகருக்கு என அமைந்த மிகப்பெரிய கோயில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. இச்சன்னதியில் எங்கிருந்து பார்த்தாலும் தனது பிரம்மாண்டமான உருவத்தால் எளிதில் தரிசனம் தருபவர் கற்பக விநாயகர். குடைவரைக் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தி விழா இங்கு தேரோட்டத்துடன் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மணிமூர்த்தீஸ்வரம் - உச்சிஷ்ட கணபதி

மணிமூர்த்தீஸ்வரம்

திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி கோயிலைப் போலவே ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள, நாட்டின் மிகப்பெரிய விநாயகர் கோயில். மூலவர் உச்சிஷ்ட விநாயகராக, தமது இடது மடியில் தேவியை அமர்த்திய கோலத்தில் இருக்கிறார். முற்காலத்தில் இங்கு தேரோட்டம் நடைபெற்றிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - முக்குறுணி விநாயகர்

முக்குறுணி விநாயகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சொக்கநாதர் சன்னதிக்கு செல்லும் வழியில் 8 அடி உயரத்தில் முக்குறுணி விநாயகர் வீற்றிருக்கிறார். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருக்கு, மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் அருகே கிடைத்தவர் இந்த விநாயகர். மன்னரின் ஏற்பாட்டில் தற்போதைய இடத்தில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஒரு குறுணி என்றால் 6 படியாகும். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு மூன்று குறுணி அரிசியாலான கொளுக்கட்டை படைக்கப்படுகிறது.

மூன்று குறுணி அரிசியாலான கொளுக்கட்டை படையல்

உச்சிப்பிள்ளையார்

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள 275 அடி உயர மலையின் மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்திருக்கிறது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். மலை உச்சியில் இருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்படவில்லை. ஸ்ரீரங்க மகாத்மியத்தில் விபீஷணன் கையால் உச்சந்தலையில் குட்டு வாங்கியதாலும், அந்த வடு இப்போதும் தலையின் உச்சியில் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு முக்குறுணி கொளுக்கட்டை படைக்கப்படுகிறது.

திருச்சி - மலைக்கோட்டை - உச்சிப்பிள்ளையார்

வெள்ளைப் பிள்ளையார்

திருவையாறில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் காவிரிக்கரையில் உள்ள திருவலஞ்சுழி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான வெள்ளைப் பிள்ளையார் கோயில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் இவர். பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை சுவாமிமலையில் முருகப் பெருமானிடம் கேட்கச் சென்ற சிவபெருமான், வழியில் இத்தலத்துக்கு வந்ததாக புராணம்.

திருவலஞ்சுழி - வெள்ளைப் பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஊரில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடுவதில்லை. இதற்குபதில் வீடுகளில் மோதகம் தயாரித்து, அதனை வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு நைவேத்தியமாக படைப்பார்கள். பின்னர் அனைத்து மோதகங்களும் சேர்த்து பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

உப்பூர் - வெயிலுகந்த விநாயகர்

வெயிலுகந்த விநாயகர்

தட்சனின் யாகத்தை வீரபத்திரர் நிர்மூலமாக்கிய சம்பவத்தில், சிவனின் சாபத்தால் சூரியபகவான் தனது சக்தியை இழந்தார். மீண்டும் சூரியன் தனக்கு சக்தி கிடைக்க வேண்டி விநாயகரை எண்ணி தவமிருந்தார். விநாயகர் அருளால் மீண்டும் சூரியன் தனது ஒளியைப் பெற்ற தலம், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் ஆகும். இங்குள்ள விநாயகர் வெயிலுகந்த விநாயகர் எனப்படுகிறார். தினமும் காலை வேளையில் சூரிய ஒளி இவரை வணங்கிச் செல்வதைக் காணலாம்.

திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர்

தேன் உறிஞ்சும் விநாயகர்

கும்பகோணம் அருகே காவிரிக்கரையில் அமைந்துள்ள தலம் திருப்புறம்பியம். இங்கு வர்ண பகவானால் கடல் நுரையைக் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரளயம் காத்த விநாயகர் கோயில் கொண்டுள்ளார். இவருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும். தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில் காட்சியளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி - மணக்குள விநாயகர்

மணக்குள விநாயகர்

புதுச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் பக்தர்களை அதிகம் ஈர்க்கும் கோயில். எப்போதும் தண்ணீர் வற்றாத ஒரு கிணற்றின் மீது மூலவர் அமைந்திருப்பது அதிசயம். மூலவருக்கு அருகில் அரை அடி விட்டம் கொண்ட, ஆழம் காண முடியாத துவாரம் இருப்பதையும், அதில் எப்போதும் தண்ணீர் இருப்பதையும் காணலாம். வேறு விநாயகர் சன்னதிகளில் இல்லாத வகையில் இங்கு, பள்ளியறை இருக்கிறது. இங்கு குழந்தையாக, தனது தாயுடன் விநாயகர் சயனிக்கிறார்.

திருச்செங்காட்டங்குடி - வாதாபி கணபதி

வாதாபி கணபதி

5-ம் நூற்றாண்டில் காஞ்சி மன்னர் நரசிம்ம பல்லவனின் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதியார். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் தலைநகரான வாதாபி மீது இவர் போர் தொடுத்தார்.

பல்லவர் படைகளால் வாதாபி நகரம் நிர்மூலமாக்கப்பட்டது. அதன்பின்னர் எந்தவொரு போரிலும் தான் பங்கெடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என்ற பெயரில் சிவனடியாராக மாறினார். அவர் வாதாபியில் இருந்து கொண்டுவந்த ஒரு விநாயகர் விக்ரகத்தை தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். வாதாபி கணபதி என்ற பெயரில் இப்போதும் தரிசிக்கலாம்.

திலதர்ப்பணபுரி - ஆதிவிநாயகர்

தும்பிக்கை இல்லாத விநாயகர்

மயிலாடுதுறைக்கும் - திருவாரூருக்கும் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இருக்கிறது திலதர்ப்பணபுரி. இந்த கிராமத்தில் ஆதிவிநாயகர் கோயில் அமைந்துள்ளது. இவருக்கு தும்பிக்கை கிடையாது. வலது காலை மடித்து இடதுகாலை தொங்க விட்டு, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

திருநறையூர் - பொல்லாப் பிள்ளையார்

திருநறையூர் பொல்லாப் பிள்ளையார்

வலம்புரி விநாயகரான இவர் சுயம்புவாகத் தோன்றியவர். சிற்பியின் உளியால் செதுக்கப்படாத (பொள்ளாப் படாத) பிள்ளையார் இவர். இதுவே பொல்லாப் பிள்ளையாராக மருவியது. தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் இவர்.

x