சபரிமலை வருமானம் ரூ.20 கோடி சரிவு! என்ன காரணம்?


சபரிமலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருவாய் ரூ.20 கோடி குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மெய்நிகர் வரிசை மூலம் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில், உடனடி முன்பதிவு மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் சபரிமலையில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டநெரிசலை தவிர்க்க கேரள உயர் நீதிமன்றம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் தேவசம்போர்டு மற்றும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவானதே என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் தற்போதைய காலகட்டத்தில் 19 லட்சத்து 9 ஆயிரத்து 241 பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டு 28 நாட்கள் ஆன நிலையில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 730 பக்தர்களே வந்திருக்கின்றனர்.

இதேபோல் வருவாயும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகவே இருக்கிறது. அப்பம் மற்றும் அரவணை பிரசாத விற்பனை, உண்டியல் வருமானம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அந்த வருவாய் ரூ.134.44 கோடியே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருவாய் ரூ.20 கோடி குறைந்திருக்கிறது.

தற்போது கூட்டநெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக மெய்நிகர் வரிசை முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருக்கிறது. இதனால் வருவாய் மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.

x