கூட்ட நெரிசலால் திணறி வந்த சபரிமலையில் தற்போது நிலைமை சீராகி உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சன்னிதானம் செல்லாமலே பக்தர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் 12 முதல் 16 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
எனவே அதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் இருந்தும் காவல்துறை தரப்பில் இருந்தும் தேவசம் போர்டுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் முன்பதிவு குறைக்கப்பட்டது. அதனால் சபரிமலை சந்நிதானத்தில் நேற்று முதல் பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக உள்ளது.
கூட்ட நெரிசலை காரணம் காட்டி கேரளாவில் அங்குள்ள அரசியல் கட்சியினர் அரசியல் செய்ய ஆரம்பித்தனர். இதற்குப் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஆளும் அரசு மீது குற்றம் சாட்டியது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் கோட்டயத்தில் பதில் தெரிவித்துள்ளார்.
``அரசின் களப்பணிகள் சபரிமலையில் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலையில் தற்போது நிலைமை சீராகி அமைதியான சூழல் நிலவி வருகிறது. சென்ற ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 16,070 காவலர்கள் நியமிக்கப்பட்டு இந்த ஆண்டு 16,120 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
108 கோடி செலவில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கனூர், கழக்கூட்டம், சிரங்கரை, எருமேலி, நிலக்கல், மணியம் கோடு ஆகிய 6 இடங்களில் ஓய்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே சென்னை மழை வெள்ளம், தெலங்கானா தேர்தல் காரணமாகச் சபரிமலை பயணத்தை ஒத்தி வைத்தவர்களும் தற்போது தரிசனத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதுவும் நெரிசலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.
சென்ற சீசனில் இதே காலத்தில் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தக் கூட்ட நெரிசல் புல்மேடு, எருமேலி காட்டுப் பாதை வழியாகப் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் ஏற்படுகிறது.
ஆகவே இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சபரிமலையில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வது காலம், காலமாக நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான்'' என்று பினராயி விஜயன் கூறி உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!