குட்நியூஸ்... சபரிமலையில் கட்டுக்குள் வந்தது கூட்டம்: பக்தர்கள் நிம்மதி!


சபரிமலை ஐயப்பன் கோயில்

ஐயப்பன் தரிசனத்துக்கு பக்தர்களுக்கான முன்பதிவு குறைக்கப்பட்டதால் சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கடந்த 12-ம் தேதி கூட்ட நெரிசல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வேதனையுடன் திரும்பினர். இந்த நிலையில், சபரிமலையில் நெரிசலைத் தவிர்க்கவும், வசதியான தரிசனத்துக்கு கூட்டத்தை முறைப்படுத்தவும் நிலக்கல்லில் உள்ள தரிசன நேரடி முன்பதிவை குறைக்க தேவசம் போர்டு உத்தரவிட்டது.

சபரிமலை

அதேநேரத்தில் தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவையும் குறைக்க உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த இரண்டு வழிகளிலும் பக்தர்களின் முன்பதிவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. சபரிமலையில் பக்தர்கள் சுலப திவ்ய தரிசனம் செய்ய நிமிடத்தில் 90 பேரைப் படியேற்றும் பொறுப்பு ஆர்ஏஎஃப் வசம் நேற்று முன் தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான தலைமை பொறுப்பிற்கு இரண்டுமுறை சிறந்த சேவைக்காக ஜனாதிபதி விருது பெற்ற மது கோபிநாதன் நாயர் டெபுட்டி கமாண்டென்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்று காலை முதல் சன்னிதானத்தில் தற்போது சராசரியாக 40,000 பக்தர்களே தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

இதனிடையே, சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல்லில் ஏராளமான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு செல்ல பேருந்துகள் கிடைக்காத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!

x