மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் அர்ச்சகராகும் இளம்பெண் ரஞ்சிதா நெகிழ்ச்சி!


மண்ணார்குடி கோயில், அர்ச்சகர் ரஞ்சிதா

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெள்ளமதகு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான நடராஜன்- உமா தம்பதியரின் இரண்டாவது மகள் ரஞ்சிதா (25). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பாஞ்சராத்ரா ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்தார். அவர் முறைப்படி பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுவதற்கான அரசாணை அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.

மாதம் ரூ.8000 ஊதியத்துடன் வழங்கப்படவுள்ள இந்த அர்ச்சகர் பணி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். மேலும் அர்ச்சகர் பயிற்சியின் போது விஸ்வரூபம், திருவாராதனம், புண்ணிய வாகனம், சூப்தம் , திவ்ய பிரபந்தந்தில் 110 பாசுரங்களை பயிற்சி எடுத்துக் கொண்டதாக ரஞ்சிதா தெரிவித்தார்.

ரஞ்சிதாவுடன் பயிற்சி முடித்த ரம்யா, கிருஷ்ணவேணி

கொரடாச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த ரஞ்சிதா, திருவாரூர் திருவிக கல்லூரியில் பி.எஸ்சி ஐடி முடித்தார். இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கின்ற திட்டத்தின் கீழ் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடவுளை வழிபடுவதுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்கிறோம் என்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிற என்று கூறுகிறார்.

ரஞ்சிதாவின் குடும்பத்தில் முதன் முதலாக அரசு வேலைக்கு செல்லும் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

x