திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா கோலாகலம்


மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கிராம மக்கள் சார்பில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலையில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வேலை வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. அதனைத் தொடர்ந்து வேல் பல்லக்கில் வைத்து மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க வேலை மலைக்கு கொண்டு சென்றனர். அங்கு கங்கைக்கு நிகரான சுனை தீர்த்தத்தில் வேலுக்கு நீராட்டு நடந்தது. அப்போது 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அங்குள்ள குமாரருக்கு, சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் மலையிலிருந்து வேல் பல்லக்கில் கொண்டுவரப்பட்டு மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் சன்னிதியை அடைந்தது. அங்கு பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப, தூப ஆராதனைகள் நடந்து, வேல் பழனியாண்டவர் திருக்கரத்தில் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு 7 மணியளவில் பூப்பல்லக்கில் வேல் திருப்பரங்குன்றத்தில் நான்கு முக்கிய ரத வீதிகளில் திருவீதி உலா நடைபெறும். இரவு 9 மணியளவில் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி திருக்கரத்தில் தங்கவேல் சேர்ப்பிக்கப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பா.சத்ய பிரியா, அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணிச்செல்வன், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

x