காக்கும் கார்த்திகைச் செல்வன் - 42


பவகட நாகலமடிக்கே சுப்பிரமணிய சுவாமி

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள பவகட நாகலமடிக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று புகழ்பெற்ற சுப்பிரமணியர் தலங்களுள் ஒன்று. செவ்வாய், ராகு, கேது தோஷங்கள் மட்டுமல்லாமல், நவக்கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய தலமாக இத்தலம் விளங்குகிறது.

(கர்நாடக மாநிலத்தில் உள்ள 3 சுப்பிரமணிய தலங்கள்; ஆதி சுப்ரமண்யா - குக்கே சுப்பிரமணியம், மத்திய சுப்ரமண்யா - கட்டி சுப்பிரமணியம், அந்திய சுப்ரமண்யா - பவகட நாகலமடிக்கே சுப்பிரமணியம் ஆகும்.)

வடக்கு பினாகினி ஆற்றின் கரையில் உள்ள அந்திய சுப்பிரமணியம் கோயில், கர்நாடக மாநிலம் பவகுடா தாலுக்காவில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளன. மிகவும் பிரசித்திபெற்ற முருகப்பெருமானின் விக்கிரகம் மற்றும் அழகிய தெய்வீகத் தோற்றத்தைக் காண எண்ணற்ற பக்தர்கள் எப்போதும் இத்தலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் பவகட நாகலமடிக்கே பகுதி ‘ரோட்டம் முன்னூர் ஹரிவே’ என்று அழைக்கப்பட்டது. நோளம்ப பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி பசுமையான மேய்ச்சல் நிலங்களைக் கொண்டு அமைந்திருந்தது. அதிக மான்களைக் கொண்ட இப்பகுதி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்துள்ளது.

நாகலமடிக்கே, ஆரம்ப காலத்தில் ஓர் அக்ரஹாரம் அல்லது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இங்கு அதிக அளவில் அந்தணர்களே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் கோயில் அர்ச்சகராகப் அன்னம் பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், ஒவ்வொரு ஆண்டும் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

காலப்போக்கில் அவருக்கு வயதான காரணத்தால் அவரால் முன்பு போல் விரைவாக நடக்க இயலாமல் போனது. ஒரு வருடம் சரியான நேரத்தில் அவரால் கோயில் தேரோட்டத்துக்குச் செல்லமுடியாமல் போனது. இது குறித்து மிகுந்த கவலையுடன் கோயிலை நோக்கி நடந்தார் பட்டர்.

மற்றொரு புறம், குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து ரதம் (தேர்) அசைய மறுத்தது. இதுகுறித்து பக்தர்கள் கவலை அடைந்தனர். அப்போது முருகப்பெருமான் ஒரு பக்தர் முன்னர் தோன்றி, அன்னம் பட்டர் வரும்வரை, தேரோட்டத்துக்கான எந்த சம்பிரதாயங்களையும் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மிகுந்த சிரமத்துடன் அன்னம் பட்டர் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலை வந்தடைந்தார். அன்னம் பட்டர் வந்த பிறகே, தேர் நகர்ந்தது. அப்போது அன்னம் பட்டருக்கு முன்பாக தோன்றிய முருகப்பெருமான், அவரை நாகலமடிக்கேவிலேயே பூஜைகளை செய்யுமாறு பணித்தார். குக்கே கோயிலில் இருந்து நாகாபரணம் உள்ளிட்ட ஆபரணங்களை தம்முடன் எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினார். இந்த நாகாபரணம் இன்றும் ரதோற்சவம் அல்லது கார் திருவிழாவின்போது வழிபடப்படுகிறது.

ஒருநாள் அன்னம் பட்டர் கனவில் தோன்றிய முருகப்பெருமான் தான் வட பினாகினி நதியில் இருப்பதாகக் தெரிவித்தார். அந்த விக்கிரகத்தை எடுத்து கோயில் அமைக்குமாறும் பணித்தார். ஊர் மக்கள் உதவியுடன் முருகப்பெருமான் குறிப்பிட இடத்தை தோண்டியதில் முருகனின் மூல விக்கிரகம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு நாகலமடிக்கேவில் கோயில் எழுப்பப்பட்டது. அன்னம் பட்டர் மூன்று திசைகளை நோக்கி மூன்று கற்களைக் கொண்ட ஒரு கோயிலை நிறுவினார். அவரது காலத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் இங்கு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரொட்டம் பால சுப்பையா என்ற பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், நாகலமடிக்கே கோயிலை விரிவுபடுத்தி பெரிய கோயிலாக கட்ட அறிவுறுத்தினார். அதன்படி நாகலமடிக்கே கோயில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயில் உற்சவங்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இன்று வரை பால சுப்பையாவின் குடும்பத்தினர் ரதோற்சவம் சமயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் உள்ளது நாகலமடிக்கே. தெலுங்கு மொழி பேசுபவர்கள் நிறைந்த தலமாக இத்தலம் உள்ளது. ‘நாகலா’ என்றால் பாம்பு அல்லது நாகம் என்று பொருள்படும். தெலுங்கு மொழி பேசுபவர்கள் இத்தலத்தை ‘நாகலமாடகா’ என்றும், கன்னடம் பேசுபவர்கள் இத்தலத்தை ‘நாகலமடிக்கே’ என்றும் அழைக்கின்றனர்.

நாகலமடிக்கேவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மூன்றடி உயரத்தில் அமைந்துள்ளார். இவரை ஏழு தலைகளுடன் கூடிய நாகர் மூன்று மடிப்புகளுடன் சுற்றிக்கொண்டுள்ளார். தீடிநாகப்பா (உத்பவ மூர்த்தி) என்றழைக்கப்படும் மற்றொரு மூர்த்தியும் அருகே காணப்படுகிறார். அனைத்து நோய்களையும் தீர்க்கும் சுவாமியாக தீடிநாகப்பா உள்ளார் என்பது ஐதீகம். சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய தீடிநாகப்பா, ஒவ்வொரு நாளும் அளவில் வளர்ந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் வளாகத்தில் ஈஸ்வர சுவாமி மற்றும் ஆஞ்சநேய சுவாமி சந்நிதிகள் உள்ளன.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து. சிறிதுகாலம் தங்கியிருந்து காமனாதுர்கா காகத்ரி மலைக்கு (நீலம்மனஹள்ளி) பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதே இடத்தில் ராமபிரானுக்கும் லட்சுமணனுக்கும் நிறைய விவாதங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த மலை கமிலகொண்டா என்று அழைக்கப்படுகிறது. இங்கு ராமபிரானுக்கும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வசிப்பவர்களும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏதாவது விவாதித்துக் கொண்டே இருப்பார்கள் என்றும், நாகலமடிக்கே சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால், பல நாட்களாக இருக்கும் குடும்பப் பிரச்சினைகள் தீரும் என்றும், குடும்ப உறவினர்களுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரதோற்சவம்

ஒவ்வொரு ஆண்டும் புஷ்ய மாத (டிசம்பர் - ஜனவரி) சுத்த சஷ்டியை (பௌர்ணமி தினத்துக்குப் பிறகு வரும் சஷ்டி தினம்) முன்னிட்டு இங்கு சிறப்பு ரதோற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்துக்குப் பிறகு, 10 நாள் தனகல ஜாத்ரா என்ற திருவிழா நடைபெறுகிறது. அதுசமயம் பக்தர்களுக்கான இருப்பிடம், உணவு, ஏழை எளியோருக்கான உடை உள்ளிட்டவற்றை நாகலமடிக்கேவில் உள்ள அறக்கட்டளை ஏற்பாடு செய்து வருகிறது.

இங்கு நடைபெறும் காளைகள் கண்காட்சி, சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கு பெரிய அளவில் எருதுச் சண்டை நடைபெறும். இதற்காக ஆந்திர மாநிலம், தும்கூர் மற்றும் அனந்தபூர் மாவட்டத்தில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு, 10 நாட்களுக்கு விற்பனையும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

ஒவ்வொரு வருடமும், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு கல்யாணோற்சவம், பிரம்மோற்சவம், ரதோற்சவம் நடைபெறும். இந்த திருவிழா அங்குரார்ப்பணம், கொடியேற்றம் என்று தொடங்கி, ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிராமண அன்ன சந்தர்ப்பணா, சுப்பிரமணிய சஷ்டி, கஜ வாகனோற்சவம் நாட்களில் பக்தர்கள் திரளாகக்கூடி சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகங்களை செய்வது வழக்கம்.

புஷ்ய மாதம் சுத்த பஞ்சமி தினத்தில் தொடங்கி 5 நாட்களுக்கு இங்கே ‘பருஷா’ திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பினாகினி நதிக்கரை மற்றும் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்படும். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நவம்பரில் கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் இத்தலத்துக்கு வருகை புரிவது வழக்கம். இங்கு நடைபெறும் சர்ப்ப தோஷ சாந்தி (கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷ நிவாரா, ராகு கேது சாந்தி), நாக பிரதிஷ்டா பூஜா, அஷ்லேஷ பலி பூஜா, சர்ப்ப சம்ஸ்கார பூஜா, சாந்தி பாககாலு பூஜா உள்ளிட்ட பூஜைகளிலும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வர்.

செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8-15 முதல் 11 மணி வரையும், மாலை 6 முதல் 7 வரையும் கோயில் திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 8-15 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 6 முதல் 7 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் கோயில் எப்போதும் திறந்திருக்கும்.

அமைவிடம்: கர்நாடக மாநிலம் பவகடாவில் இருந்து 16 கி.மீ தொலைவில் பினாகினி ஆற்றின் கரையில், 18 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது.

x