சபரிமலை பரிதாபங்கள் | ப்ளீஸ்... அப்பாவை கண்டுபிடிச்சு தாங்க... கதறியழுத சிறுவன்!


சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் தனது தந்தையை தவறவிட்ட சிறுவன் ஒருவன் தனது தந்தையை காணாவில்லை என பேருந்தில் இருந்தபடி போலீஸாரிடம் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கார்த்திகை மாதம் நிறைவடைவதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இருமுடி கட்டிவரும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பதினெட்டாம்படி ஏறவும் பல மணிநேரம் காத்திருக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி மாடல் க்யூ முறையை சபரிமலை தேவசம்போர்டு அறிமுகப்படுத்தியது. ஆனாலும் எந்தப் பலனும் இல்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பல பக்தர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் தரிசனம் செய்யாமல் பந்தளத்துடன் வீடு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ என்பது நிலக்கல் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தைத் தவறவிட்ட அந்தச் சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதான்.

அப்போது அருகே போலீஸ்காரர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்துத் தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தான். இதற்கிடையே சிறுவனின் தந்தையும் அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் தனது அழுகையை நிறுத்தினான். இதற்கிடையே தான் அந்த சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இப்போது இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x