வைணவ திவ்யதேசங்களில் ஐந்து தலங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் எனப்படுகின்றன. இவை ஐந்து தலங்கள் கிருஷ்ணாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிருஷ்ணனின் லீலைகள் நடைபெற்றதாகவோ அல்லது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா காட்சி கொடுத்ததாகவோ இத்தலங்கள் அமைந்திருக்கின்றன.
திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இவை ஐந்து தலங்களுக்கும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் எனப் பெயர்.
திருக்கண்ணங்குடி
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது. வசிஷ்ட முனிவர் ஒருமுறை வெண்ணெயில் கிருஷ்ணனைப் போல் விக்ரகம் செய்து வழிபடுவது வழக்கம். இவரது பக்தியை மெச்சிய கிருஷ்ணன், ஒரு நாள் சிறு குழந்தையாக, கோபாலனாக வடிவங்கொண்டு வசிஷ்டர் ஆராதனைக்கு வைத்திருந்த வெண்ணெயை அப்படியே எடுத்து விழுங்கி விட்டு, ஓட்டம் பிடித்தான். இதைக் கண்ட வசிஷ்டர், அடே, அடே என்று கூறி கோபாலனை விரட்டிக் கொண்டே சென்றார்.
கிருஷ்ணாரண்யம் என்ற திருக்கண்ணங்குடியில் அக்காலத்தில் மகிழ மரத்தின் அடியில் எண்ணற்ற ரிஷிகள் மஹாவிஷ்ணுவைக் குறித்து தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணன் ஓடிவருவதை தமது, ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள், தமது பக்தியென்னும் பாசக்கயிற்றால் கண்ணனைக் கட்டுண்ணப் பண்ணி நிறுத்தினர்.
அவர்கள் பக்திக்கு கட்டுண்டு நின்ற கண்ணன், “வசிஷ்டர் என்னை விரட்டி வருகிறார். வேண்டிய வரத்தைச் சீக்கிரம் கேளுங்கள்” என்று அவசர அவசரமாகச் சொல்ல, அவர்களோ எங்களுக்கு காட்சி கொடுத்ததைப் போலவே இங்கேயே நின்று எப்போதும் காட்சியருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.
ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி நின்ற வேணுகானனின் பாதாரவிந்தங்களை, வசிஷ்டர் பற்றிக் கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகிவிட்டன. பிரம்மனும் தேவர்களும் வந்து பிரம்மோத்ஸவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி எனப் பெயராயிற்று.
மூலவருக்கு சியாமள மேனிப் பெருமாள் என்று திருப்பெயர். அதாவது நீலமேக வண்ணன் என அர்த்தம். லோகநாதன் என்றும் அழைக்கின்றனர். கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். உற்சவர் தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கண்ணன் நிற்கும் கோலம் போல காட்சி தருகிறார்.
லோகநாயகி தாயார் தனி சன்னதியில் சேவை தருகிறார். தாயாரின் மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்களில் ஒரே சாயலில் அமைந்திருப்பது அதிசயமாகும். அதுபோல், அனைத்து கோயில்களிலும் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இக்கோயிலில் கை கட்டியபடி நிற்கிறார். இது பரமபதத்தில் இருக்கும் திருக்கோலமாகும்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.