சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி நடப்பாண்டிற்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27ம் தேதி (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான ஜனவரி 6ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா தரிசன நிகழ்வை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் கோயிலுக்கு வருகை புரிவார்கள் என்பதால், முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் தீவிரப்படுத்தி உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!