சபரிமலையில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளதால் சன்னிதானம் செல்லாமலேயே பக்தர்கள் திரும்புகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதிலிருந்து நாளொன்றுக்கு 75 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மண்டல பூஜைக்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் விடுமுறை நாட்களில் 22 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்கள் எரிமேலி, கன்னமாலா, லாஹா உள்ளிட்ட பல பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பை, மணப்புரம் பகுதிகளில் 4 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
பம்பையில் இருந்து சன்னிதானம் சென்றடைவதற்கு 14 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். சபரி பீடத்தில் இருந்து பதினெட்டாம் படி வரையிலான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தந்திரி கண்டலேரு மகேஷ் மோகனாருவுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கு பிறகு தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தரிசன நேரத்தை அதிகரிக்க கேரள உயர் நீதிமன்றமும் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 17 மணி நேரமாக இருந்த தரிசன நேரம் தற்போது 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று முதல் மாலை 4 மணிக்கு பதிலாக, ஒரு மணி நேரம் முன்னதாக பகல் 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வழக்கமாக சபரிமலை ஐயப்பன் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பகல் 1 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு தான் கோயில் நடை திறக்கப்படும். தொடர்ந்து இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு, நடைசாத்தப்படும்.
தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக ஆன்லைன் புக்கிங் மூலம் 90,000 பேரும், நேரடி புக்கிங் மூலம் 30,000 பேரும் தரிசனத்திற்கு வருகின்றனர். இந்த முறை குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால் கூட்ட நெரிசலில் 18 ம் படி ஏறுவதற்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 18ம் படி ஏறுவதற்காக காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தினசரி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 75,000 ஆக குறைக்க வேண்டும் என போலீஸார், தேவசம் போர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அது குறித்து தேவசம்போர்டு பரிசீலிக்காததால் போலீஸ் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. ஆனால் சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
இந்த நிலையில் இன்று சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் ஆவதாக தேவசம்போர்டு மற்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் சன்னிதானத்திற்கு செல்லாமலே மற்ற இடங்களில் தங்கள் வழிபாடுகளை முடித்துக் கொண்டு மலையிறங்க தொடங்கியுள்ளனர்.
அடுத்து வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகம் அதிகரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேவசம்போர்டும், போலீஸும் இணைந்து திட்டமிட்டு செயல்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்கள் அமைதியாகவும் எளிதாகவும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!
ஓடும் ரயிலில் இளம்பெண் குத்தாட்டம்... இணையத்தை தெறிக்க விட்ட ’ட்யூப் கேர்ள்’ சப்ரினா!