கண்ணன் குடியிருக்கும் கோயில்கள் - 7


திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்

சென்னையில் முற்காலத்தில் அடையாற்றின் துணை நதியாக கைவரணி என்ற ஆறு உற்பத்தியாகி, இன்றைய மைலாப்பூர், திருவல்லிக்கேணி வழியாக ஓடி, வங்காள விரிகுடாவை சென்றடைந்திருக்கிறது. இந்த கைவரணி நதிக்கரையில் இருந்த பிருந்தாரண்யம் என்ற துளசிக்காட்டில், வேதவியாச மகரிஷியின் சீடரான ஆத்திரேய முனிவர் தவமிருந்தார். அவர் கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றை வைத்திருந்தார். ஒரு கையில் சங்கும், மறு கையை தன் திருவடி நோக்கி காண்பித்தவாறு அந்த விக்ரகம் அமைந்திருந்தது. அதற்கு உரிய முறையில் பூஜைகளை ஆத்திரேய முனிவர் செய்து வந்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்

அதே காலத்தில் சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப் பெருமாளை வழிபட்டு, அர்ச்சுனனுக்கு தேரோட்டிய விளங்கிய கண்ணனை தரிசிக்க வேண்டும் என விரும்பி கடும் தவம் புரிந்தான். அப்போது திருவேங்கடமுடையான் அசரீராகத் தோன்றி, “கைவரணி தீர்த்தக்கரையில் உள்ள பிருந்தாரண்யத்தில் நீ விரும்பிய தோற்றத்துடன் எழுந்தருளி இருக்கிறேன். அங்கு சென்று தரிசிப்பாயாக” என்று அருளாசி வழங்கினார்.

மன்னன் சுமதியும், பிருந்தாரண்யத்துக்கு விரைந்து வந்து, அங்கிருந்த ஆத்திரேய முனிவரைக் கண்டு, தனது விருப்பத்தைக் கூறினான். ஆத்திரேயர் தான் வழிபட்டு வந்த கண்ணனின் விக்ரகத்தை தரிசிக்க வைத்தார். தான் விரும்பிய வடிவில் அந்த விக்ரகம் இருப்பதைக் கண்ட மன்னன், ஆத்திரேயரின் வழிகாட்டுதலோடு அங்கு கோயில் கட்டி, அந்தப் பெருமானை அங்கேயே பிரதிஷ்டை செய்தான்.

கண்ணனுக்கு வலப்புறம் ருக்குமணியையும், இடப்புறம் கண்ணனின் அண்ணன் பலராமர், தம்பி சாத்தியகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருக்கும் விக்ரகங்களை நிறுவி வழிபட்டு, அவ்விருவரும் மோட்ச உலகு பெற்றனர். இக்கோயில்தான் இன்றைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கருட சேவை

திருப்பதி திருவேங்கடவனால் அடையாளம் காட்டப்பட்டதால், மூலவருக்கு வேங்கடகிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமாக இவர் சேவை தருகிறார். உற்சவருக்கு பார்த்தசாரதி என்பது திருப்பெயர். திருமலை வெங்கடேசனே, வேங்கட கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதால் திருவல்லிக்கேணியை இரண்டாவது திருப்பதி என்றழைக்கிறார்கள். திருப்பதியைப் போலவே புரட்டாசி சனிக்கிழமைகள் இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை கொண்டிருந்ததால் திருவல்லிக்கேணி என்ற பெயர் உண்டாயிற்று. பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு முன் உள்ள தெப்பக்குளமே, இந்த அல்லிக்கேணி. இதுவே பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தமாக விளங்குகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். ‘பார்த்தன் தன் தேர்முன் நின்றானை இத்தலத்துக் கண்டேன்’ என்றும், ‘தெள்ளிய சிங்கமாகியத் தேவைத் திருவல்லிக்கேணி கண்டேன்’ என்றும் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். 108 திவ்ய தேசங்களிலே, தான் வளர்ந்த குலவழக்கப்படி பெரிய மீசையுடன் பெருமாள் எழுந்தருளியுள்ள தலம் இது ஒன்றுதான்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்

x