இம்மாதம் செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதையொட்டி சிலைகள் அமைப்பது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 25 இந்து அமைப்புகள் கலந்து கொண்டனர். சுமார் 1மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சிலைகள் அமைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து அமைப்பினர், விநாயகர் சதூர்த்தி பண்டிகை தொடர்பாக காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் காவல்துறையிடம் கேட்ட அனைத்து கோரிக்கைக்கும் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்து அமைப்பை சேர்ந்த ராமபூபதி, சனாதன ஒழிப்பு பற்றி இழிவாக பேசிவரும் திமுக ஆட்சியில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. 10 அடிக்கு மேல் சிலைகளை வைக்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், கூடுதலாக வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார். மேலும், புதிய இடத்தில் சிலைகளை நிறுவக்கூடாது எனவும் மசூதி,தேவாலயம் ஆகிய இடங்களில் ஊர்வலம் செல்லக்கூடாது என தெரிவித்ததாக கூறினர்.
இவரை தொடர்ந்து பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில் கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சதூர்த்தி பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இந்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ஆவேசமாக கூறினார்.