மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் சானிட்டரி நாப்கின்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் விநோதமான பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள அரேரா காலனியில் அன்னபூர்ணா தேவி கோயில் அமைந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள இந்த சமூகத்தில் போபாலில் அமைந்துள்ள இந்த அன்னபூர்ணா தேவி கோயில் பெண்களின் உரிமைக்காக மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
இங்கு கடவுளுக்கு காணிக்கையாக பக்தர்கள் சானிட்டரி நாப்கினை வழங்குகின்றனர். அப்படி வழங்கப்படும் அனைத்து நாப்கின்களும் பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன. உலகிலேயே இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
அன்னபூர்ணா தேவி கோயிலில் வழங்கப்படும் அனைத்து சானிட்டரி பேட்கள் மற்றும் மாதவிடாய் கப்களும் (Menstrual Cups) போபாலின் குடிசைப் பகுதிகள் மற்றும் பெண்கள் அரசுப் பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கும் இந்த யோசனை அசாமின் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் இருந்து உருவானதாகும். அங்கு புகழ்பெற்ற அம்புபாச்சி திருவிழாவில் இத்தகைய வழக்கம் பின்பற்றப்படுகிறது.
இந்த அன்னபூர்ணா கோயிலில் மூன்று வகையான நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. முதல் வகையில் கோதுமை மற்றும் பருப்பு போன்ற தானியங்கள் வழங்கப்படும். இரண்டாவது வகை நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் குழந்தைகளின் கல்விக்காக புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள் மற்றும் பிற எழுது பொருட்களை வழங்குவது வழக்கம்.
மூன்றாவதாக 'ஆரோக்யா தான்' என்ற திட்டம். இதில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கப்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. இந்த முயற்சியின் மூலம் அன்னபூர்ணா தேவி கோயிலுக்கு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை மக்கள் வழங்கியுள்ளனர்.