தேனி அருகே உள்ள வருசநாட்டில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழித்து, பொதுமக்கள் நலம் பெற வேண்டியும் நடைபெற்ற யாக வேள்வி பூஜையை ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம் வருசநாட்டில் வைகை ஆற்றின் கரையோரத்தில் அருள்மிகு ஆதிபராசக்தி இளைஞர் ஆன்மிக வழிபாடு மன்றக் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிய ஓம் சக்தி விநாயகர், நாகம்மாள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான சுற்று பூஜைகள், கிராம தேவதைகள் வழிபாடு பூஜை, விநாயகர் பூஜைகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், மழை வளம் பெருகி விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் நடைப்பெற்ற 21 கலசங்களுக்கு சிறப்பு யாக வேள்வி பூஜையில் ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து 108 பால்குடம், 108 கஞ்கி களையங்கள், முளைப்பாரிகளை பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் விளக்கு பூஜை, அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.