கண்ணன் குடியிருக்கும் கோயில்கள் - 6


காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள்

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, அஸ்தினாபுரத்தில் துரியோதனன் சபைக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தூது சென்றார். ‘கண்ணன்தானே பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம் அல்லவா?’ என்று எண்ணினான் துரியோதனன்.

காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில்

இதற்காக பூமிக்கடியில் ஒரு நிலவறையை உண்டாக்கி, மல்லர்கள் சிலரை அதில் நிறுத்தினான். அந்த நிலவறையின் மீது பலகைகளைப் போட்டு மூடி, அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழும். உடனே அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனனின் திட்டம். துரியோதனனின் திட்டப்படியே நிலவறை சரிந்துவிழ, உள்ளே விழுந்த கண்ணன் மிகப்பெரிய திருமேனியை எடுத்தார். மல்லர்களைக் கொன்று வெளியே வந்தார்.

மகாபாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்குப் பின், ஜனமேயஜயன் என்ற மகாராஜன், வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்டான். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்ற இடத்தில் எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை, தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு உபாயம் கேட்டான்.

சத்தியவிரத தலமான காஞ்சிபுரத்துக்கு சென்று, அஸ்வமேதயாகம் செய்தால், யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாம் என்று முனிவர்கள் கூற, மன்னன் அவ்விதமே செய்தான்.

யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும், ஹாரித முனிவருக்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு.

காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் உள்புறம்

இதே திருக்கோலத்தில் இப்போதும் காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில், பாண்டவ தூதர் பெருமாள் கோயிலில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்ட திருமேனியுடன், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். ருக்மணி தேவியும், சத்தியபாமா பிராட்டியும் வீற்றிருக்கிறார்கள்.

அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் வேறு எங்குமில்லாத வகையில், 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில், தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை, ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழ்கிறார் இவர். இவ்வளவு பெரிய திருமேனியை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி, வேறெங்கும் சேவிக்க முடியாது.

மிகச்சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி, பெரும் ஆச்சர்யம் தருவதுமாகும்.

காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் உற்சவர்

காஞ்சிபுரம் மண்ணுக்கே தனித்துவமும், முக்கியத்துவமும் பெற்றுத் தரும் தலங்களாக திருஊரகம், திருப்பாடகம், திருவெட்கா ஆகிய மூன்று தலங்களும் விளங்குகின்றன. இவற்றில் முறையே நின்ற, அமர்ந்த, கிடந்த திருக்கோலங்களில் பெருமான் சேவை சாதிக்கிறார். தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று தலங்களும் முற்காலத்திலேயே புகழ் பெற்று விளங்கின.

ஸ்ரீராமானுஜரிடம் வாதப்போரில் தோற்றுப்போன யக்ஞமூர்த்தி என்பவர், ஸ்ரீராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து, அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். தன்னுடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்றும் மாற்றிக் கொண்டார். இந்த அருளாளப் பெருமாள் திருப்பாடகத்தில் தான் நெடுங்காலம் வசித்தார். இங்கு அவருக்குத் தனி சன்னதி இருக்கிறது.

பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டது திருப்பாடகம். ஸ்ரீமணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் - திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில்

x