சபரிமலையில் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானம் குழு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. கடந்த வாரத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 90,000 பக்தர்கள் வரை சபரிமலையில் தரிசனத்துக்காக சென்று வருகின்றனர். ஒரு நிமிடத்தில் 75 பேர் பதினெட்டாம் படி ஏறிச்செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே சபரிமலை பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேரளா உயர் நீதிமன்றம் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்து வருகிறது. மேலும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, சரங்குத்தி பகுதியில் வரிசையில் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டபின் தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் தரிசன நேரம் 16 மணி நேரம் வரை ஆகிறது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி பத்மாஸ்ரீ, சபரிமலை ஏறும்போது ஏற்பட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் செய்வதறியாது தவித்த தேவசம்போர்டு, நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி அதிகாலை 3 மணி முதல் பகல் 1 மணி வரையும், அதன்பின் நடைசாத்தப்பட்ட பின், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் தரிசன நேரத்தை அனுமதித்து வந்த நிலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இனி மதியம் மூன்று மணிக்கு நடை திறந்து தரிசனத்தை அனுமதிக்கவுள்ளது.
இதனால் ஒரு நாளைக்கு இனிமேல் 18 மணி நேரம் வரை, சபரிமலை சந்நிதானம் திறந்திருக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் பக்தர்களின் கூட்டநெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.