பரபரப்பு...வெளியானது அயோத்தி ராமர் கோயில் கருவறை புகைப்படம்!


அயோத்தி ராமர் கோயில்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறை புகைப்படம் வெளியாகியுள்ளது.

கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயில்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இக்கோயிலின் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயில் கருவறையை ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கருவறையின் உள்பகுதி வட்ட வடிவில் பிரம்மாண்ட தூண்களும், நடுவில் ராமர் சிலையை வைக்கப்பட உள்ள பீடமும் மின் விளக்குகளில் ஒளியில் அழகுற காட்சியளிக்கிறது.

ராமர் கோயில் கருவறை புகைப்படங்களை முதன் முதலில் வெளியிட்டு, சம்பத் ராய் பதிவில், 'கடவுள் ஶ்ரீ ராமாலய புனித கருவறைப் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்துவிட்டன. அந்த புகைப்படங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் கோயில் கட்டுமானப் பணிகளின் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது கோயில் கருவறை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் தான் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராமஜென்ம பூமி கோயில் மூலஸ்தானத்தில் 5 வயது குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அயோத்தியில் மூன்று இடங்களில் ராமர் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 கைவினை கலைஞர்கள், 3 விதமான கற்களைக் கொண்டு ராமர் சிலையை வடிவமைத்து வருகின்றனர். அதில் ஒரு சிலை தேர்வு செய்யப்பட்டு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். தற்போது வரை 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முழுவதுமாக நிறைவடையும்' என்றார்.

x