கண்ணன் குடியிருக்கும் கோயில்கள் - 5


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயில்

கர்நாடகா மாநிலத்தின் தென்கோடியில் மங்களூரு அருகே அமைந்திருக்கிறது உடுப்பி. இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயில் வைணவ ஆசார்யர்களின் ஒருவரான சுவாமி மத்வாச்சார்யாரால் கட்டப்பட்டது. இங்கு குழந்தைப் பருவத்தில் பகவான் ஸ்ரீபாலகிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மூலவர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். வைணவத்தின் ஒரு பிரிவான மாத்வா சம்பிரதாய அடிப்படையில் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயில்

ருக்மணி வழிபட்ட சிலை

துவாரகை நகரத்தை (தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள நகரம்) பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்த போது, அவரது தேவியான ஸ்ரீருக்மணி பிராட்டி, கிருஷ்ணரின் குழந்தை உருவச் சிலையை வடிக்க ஆசைப்பட்டார். தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் வடிக்கப்பட்ட கிருஷ்ணரின் விக்ரஹத்தை ருக்மணி பிராட்டி பல ஆண்டுகளாக பூஜித்து வந்தார்.

துவாரகை நகரம் கடல்கோளுக்கு உள்ளான போது, ருக்மணி தேவி வழிபட்ட ஸ்ரீகிருஷ்ணரின் விக்ரஹம் கடல் அலைகளால் தெற்கு நோக்கி அடித்துவரப்பட்டது. பின்னர் மாயமானது.

கப்பலில் வந்த கிருஷ்ணர்

பல நூற்றாண்டுகளுக்குப் பின் இதனைக் கண்டெடுத்த மாலுமி ஒருவர், தனது கப்பலில் அதனை எடுத்து வந்தார். மங்களூரு அருகே அவரது கப்பல் வந்தபோது கடும் புயலில் சிக்கியது. அதே சமயத்தில் கர்நாடகாவின் மல்பே கடற்கரையில் தியானத்தில் இருந்த ஸ்ரீமத்வாச்சார்யார் அந்தக் கப்பலை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். கப்பலில் இருந்த ஸ்ரீபாலகிருஷ்ணரின் விக்ரஹத்தை தனது காணிக்கையாக அந்த மாலுமி அளித்தார்.

ருக்மணி தேவியார் வழிபடப்பட்ட விக்ரஹம் அது என்பதை தியானத்தால் ஸ்ரீமத்வாச்சார்யார் அறிந்தார். மல்பே கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள உடுப்பியில் அச்சிலையை ஸ்ரீமத்வாச்சார்யார் பிரதிஷ்டை செய்தார். அதுவே உலகம் முழுக்கவிருந்து பக்தர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் உடுப்பி ஸ்ரீபாலகிருஷ்ணன் கோயில்.

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன்

மேற்கு நோக்கி திரும்பிய பகவான்

உடுப்பியில் ஸ்ரீமத்வாச்சார்யார் பிரதிஷ்டை செய்த போது ஸ்ரீகிருஷ்ணரை கிழக்கு நோக்கித்தான் பிரதிஷ்டை செய்தார். கனகதாசர் என்ற பக்தர் கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியாத நிலையில், கோயிலின் மேற்கு சுவரில் உள்ள துளைகள் வழியாக பகவானை காண முயற்சித்தார். கனகதாசருக்காக மேற்கு நோக்கி பகவான் திரும்பியதாக புராண வரலாறு கூறுகிறது. இந்த துளைகள் வழியாக நாமும் தரிசிக்கலாம். இந்த இடம் கனக கிண்டி (கனகரின் ஜன்னல்) என்று அழைக்கப்படுகிறது.

எட்டு மடங்கள்

இக்கோயில் பலிமார் மடம், கிருஷ்ண மடம், கணியூர் மடம், சோடே மடம், புட்டிகே மடம், ஆத்மர் மடம், ஷிரூர் மடம், பெஜாவர் மடம் ஆகிய எட்டு மடங்களால் நிர்வகிக்கப்படுகிறது. உடுப்பி கிருஷ்ணருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'பர்யயோத்ஸவா' என்ற பெயரில் மிகப்பெரிய உற்சவம் நடத்தப்படுகிறது. இத்திருவிழா நிறைவுற்றதும், ஒரு மடத்தின் நிர்வாகத்தில் இருந்து அடுத்த மடத்தின் நிர்வாகத்துக்கு இக்கோயில் மாறுவது வழக்கம். இப்படியே எட்டு மடங்களும் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இக்கோயிலை நிர்வகிக்கின்றன.

உடுப்பி கிருஷ்ணர் கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். இரவு 9.30 மணிக்கு நடையடைக்கப்படும். மதியம் நடை அடைக்கப்படாது. பகல் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் உடுப்பி கிருஷ்ண பரமாத்மாவை தரிசிக்கலாம்.

திருப்பதி திருவேங்கடமுடையான் கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தைப் போல், உடுப்பி கோயிலிலும் அன்னதானம் மிகவும் புகழ்பெற்றது.

x