சிதம்பரத்தில் உள்ள தனியார் பேக்கரியில் பெல்ஜியம் சாக்லேட்டில் 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் 72 கிலோ சாக்லேட்டில் நடராஜர் சிலை செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் அருகில் தெற்கு ரத வீதியில் புதிதாக ஸ்வீட் & பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெல்ஜியம் சாக்லேட்டில் 5 நாட்களில் நடராஜர் சிலை தத்ரூபமாக செய்யப்பட்டது.
3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட இந்த சிலை 72 கிலோ சாக்லேட்டில் சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலையை போன்று அச்சு அசலாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தால் இந்த பெல்ஜியம் சாக்லேட்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை சுமார் 6 மாதம் வரை தன்மை மாறாமல் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாக்லேட்டால் செய்யப்பட்ட இந்த நடராஜர் சிலையை கண்டு வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு பல்வேறு வகையான புதிய மாடல்கள் கொண்ட சாக்லேட்டில் கேக்குகள் செய்து அசத்தி வருகின்றனர்.