மத்தியப் பிரதேச மாநிலத்தில், தனது பிறந்த நாளில் வழிபாடு செய்ய கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற மகாராணியை கோவில் அர்ச்சகர்கள் வெளியே தள்ளி விட்டதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஜுகல் கிஷோர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கடந்த 1758ம் ஆண்டு முதல் 1778ம் ஆண்டு வரை இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பன்னாவின் நான்காவது பண்டேலா மன்னரான ராஜா ஹிந்துபத் சிங் என்பவர் தான் இந்த கோவிலை கட்டினார். அதேபோல இந்த கோவிலின் கர்ப்ப கிரஹத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை பிருந்தாவனத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பன்னா ராஜவம்சத்தை சேர்ந்தவர்களில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் அந்நாளில் இக்கோவிலில் அவர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் பன்னா அரச குடும்பத்தின் மகாராணியான ஜிதேஸ்வரி, தனது பிறந்த நாளை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் கோவில் கர்ப்ப கிரஹத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்று மகாராணி முயன்றிருக்கிறார். எனவே அவர் கோவிலின் கர்ப்ப கிரஹத்திற்குள் நுழைய முயற்சித்தார். இது கோவில் அர்ச்சகர்களையும், சுற்றியிருந்தவர்களையும் கடுப்பாக்கியிருக்கிறது.
மகாராணி காலை எடுத்து உள்ளே வைக்க வந்த போது அவரது காலை, அர்ச்சகர் ஒருவர் பிடித்துக்கொள்ள, கர்ப்ப கிரஹத்திற்கு வெளியே இருந்த மற்றொருவர் மகாராணியின் கையை பிடித்து வெளியே இழுத்திருக்கிறார்.
இதில் சம்பவ இடத்திலேயே மகாராணி நிலைத்தடுமாறி விழுந்திருக்கிறார். இதனையடுத்து அவர் எழுந்து கர்ப்ப கிரஹத்திற்குள் போய்விடக்கூடாது என்று அர்ச்சகரும், மற்றவர்களும் கவனமாக இருந்திருக்கின்றனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மகாராணியை அப்புறப்படுத்தினர். முன்னதாக அவர் கர்ப்ப கிரஹத்திற்குள் நுழைய முயன்றபோது சுற்றியிருந்தவர்கள் "ஏய், ஏய்" என்று கூச்சலிட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகார் காரணமாக மகாராணி மீது 295ஏ பிரிவின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே சனாதனத்திற்கு ஆதரவாக வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் பேசி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இது தான் சனாதனத்தின் வெற்றி... மகாராணியாக இருந்தாலும் அனுமதியில்லை என்று பகிர்ந்து வருகிறார்கள். அதே சமயம்... இது தான் சனாதனத்தின் தோல்வி... சாதாரண பெண்ணாக இருந்தாலும் அனுமதிக்க வேண்டும் என்கிற குரல்களும் ஒலிக்கின்றன.