“காலை யெழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்மை கொலோ
சோலைமலைப் பெருமாள் துவராபதி யெம்பெருமாள்
ஆலினிலைப் பெருமாள் அவன் வார்த்தை யுரைக்கின்றதே”
- நாச்சியார் திருமொழி 9-8.
“மானிடர்க்கு முன்பாகவே காலையில் துயில் நீத்து எழுந்திருக்கும் குருவிக் கூட்டமெல்லாம் ஆலமரத்தில் இலையில் ஒரு பாலகனாய் பள்ளி கொண்ட இந்த துவாரகை எம்பெருமானின் பெயரைக் கூவிக் கொண்டு திரிகிறதே” என்று, ஸ்ரீஆண்டாளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் துவாரகை.
இந்தியாவில் புகழ்பெற்ற தலமாகவும், எந்நேரமும் பக்தர் கூட்டம் பாடிப் பரவசித்துக் கூடிக் குலவும் இடமாகவும் திகழ்கிறது துவாரகை. இத்தலத்தைப் பற்றிச் சொல்லாத வடநாட்டுப் புராணங்களே இல்லையென்று சொல்லலாம்.
மதுராவில் பிறந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அங்கிருந்து ஆயர்பாடியில் வளர்ந்தார். மீண்டும் மதுராவில் கம்சனைக் கொன்றபின் தனது தந்தை வசுதேவை மதுராவுக்கு மன்னராக்கினார். சாந்திபனி குருகுலத்தில் கல்வி பயின்றார். பின்னர் இன்றைய குஜராத் மாநிலம், செளராஷ்டிரா கடற்கரையோரத்தில், கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் துவாரகை என்ற நகரத்தை உருவாக்கி, அதன் மன்னரானார்.
இதன் அருகில்தான் இந்தியாவின் புகழ்பெற்ற ஓகா துறைமுகம் அமைந்துள்ளது. குஜராத்தின் தலைநகரமான அகமதாபாத்தில் இருந்து ஓகா செல்லும் ரயிலில் ஏறி, துவாரகா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் துவாரகா கோயில் அமைந்துள்ளது.
துவாரகையில் தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுக்குள் மூழ்கிவிட்டது. இக்கோயிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். கடந்த 5,000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், பல்வேறு படையெடுப்புகளாலும் இத்தலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேற்கு நோக்கிய கோயில்
கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தலம் இந்த துவாரகாபுரி. இத்தலத்தில் மூலவர் துவாரகா நாத்ஜி என்றும் கல்யாண நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் ருக்மணி உட்பட கண்ணபிரானின் எட்டு தேவியர்க்கும், அவரது அண்ணன் பலராமருக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தீர்த்தம்: கோமதி நதி.
ஓயாமல் நைவேத்தியம்
இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். துவாரகா நாத்ஜி எம்பெருமானுக்கு, ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து, மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்று அழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு கனி வர்க்கங்கள் படைக்கிறார்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான் கண்ணன். இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு (திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.
ஓடிவந்த பக்த மீரா
பக்த மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும், இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரில் இருந்து பித்துப் பிடித்தவள் போல் அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் பக்த மீரா ஓடிவந்தாள். எங்கே துவாரகை? எங்கே என் நாதன்? என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன் மூடியிருந்த கோயில் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக் கலந்தது இந்த தலத்தில்தான். இவளின் கானம் தூணுக்குத் தூண் எதிரொலித்ததும், கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
பேட் துவாரகா
துவாரகைக்கு அருகே அரபிக் கடலுக்குள் உள்ள தீவை, தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை பேட் துவாரகா என்று அழைக்கின்றனர். துவாரகா சன்னதியிலிருந்து ஓகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும் நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக் காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி சேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்கு தீர்த்தம் என்னும் மிகப் பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.
முக்தி தரும் ஏழு தலங்களில் துவாரகையும் ஒன்று.