பழநி முருகனுக்கு காணிக்கையாக பக்தர்கள் பயன்பாட்டுக்கு பயன்படும் வகையில் பக்தர் ஒருவர் மினி பேருந்து ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். பழநிக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் வரை கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கை கோயில் நிர்வாகத்தால் பரிசீலிக்கப்படவேயில்லை.
இந்த நிலையில், பக்தர் ஒருவர் கோரிக்கை விடுத்ததோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மினி பேருந்தையே வாங்கி காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.
பழநி கோயில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக அந்த பேருந்தை நேற்று காணிக்கையாக வழங்கினார். இதையடுத்து, கோயில் அடிவாரம் பரதவிநாயகா் கோயில் முன் அந்த பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் உரிம புத்தகங்கள் கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது
நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு கிரி வீதியில் இந்த மினி பேருந்து இயக்கிப் பார்க்கப்பட்டது.
விரைவில், இந்தப் பேருந்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டு, ரூ.10 கட்டணத்தில் பக்தர்கள் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், கூடுதலாக 2 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.