கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம் எனப்படும் ஆயர்பாடி. இன்றைய உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து 12 கி.மீ. தொலைவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமம் இது.
கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது, இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளன. கம்சனால் ஏவப்பட்ட அரக்கர்களை அழித்தது, வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது, நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என, பலவித லீலைகளை கண்ணன் நடத்திய இடம் கோகுலம்.
இங்குள்ள கோயிலில் மூலவர் நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ருக்மணி தேவியார், சத்தியபாமா என இரு தேவியர்கள் அருள்பாலிக்கின்றனர்.
புராண கோகுல்
இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம்தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும், இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு கோயில் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவராலும் 22 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் ஆயர்பாடி. ஆனாலும் ஆழ்வார்கள் காலத்தில் இருந்த கோயில் இப்போது இல்லை. பல்வேறு போர்களின்போது, அக்கால கோயில்கள் அழிக்கப்பட்டதால், சமீபத்தில் கட்டப்பட்ட கோயில்களையே நாம் இப்போது தரிசிக்கிறோம்.
கோகுலாஷ்டமி
மதுராவில் பிறந்த கண்ணனை, வசுதேவர் ஆயர்பாடிக்கு கொண்டு வந்து, யாருக்கும் தெரியாமல் நந்தகோபன் மாளிகையில் யசோதையிடம் சேர்க்கிறார். மறுநாள் காலையில் யசோதைக்குத்தான் கண்ணன் பிறந்திருப்பதாக எண்ணி அனைவரும் மகிழ்கிறார்கள்.
தனக்கு மகன் பிறந்திருப்பதை எண்ணி மகிழ்ந்து, ஆயர்களுக்குப் பொன்னும் மணியும் பரிசாக வாரி வழங்குகிறார் நந்தகோபன். கண்ணன் வரவினால் கோகுலமே மகிழ்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்த தினம் வந்தவுடன் கோகுலம் விழாக் கோலம் பூணுகிறது. இந்த நிகழ்ச்சியை நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமிக்கு மறுநாள் இதே பெயரில் இந்த உற்சவம். வடநாட்டிலும், பிற முக்கிய ஸ்தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கண்ணன் கோகுலம் வந்துற்ற செய்தியைக் கேட்டதும் அவ்வூர்வாசிகளின் ஆராவாரத்தை பெரியாழ்வார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.
ஆயர்கள் வேகமாக ஓடி வருகிறார்களாம். விரைந்தோடி வரும்போது கால் தடுமாறி விழுந்து விடுகின்றனராம். அச்சமயம் கண்ணனைப் பார்த்துவிட்டு எதிரே வருபவர்களை ஆனந்தம் மிகுதியால் ஆரத்தழுவிக் கொள்கின்றனராம். கண்ணனைப் பார்த்துவிட்டு வந்து விட்டீர்களா என்று சந்தோஷம் மிகுதியால் ஆலிங்கனம் செய்து கொள்கின்றார்களாம். எதிரும் புதிருமாக வருவோர் போவோரிடமெல்லாம் நம்பி எங்கிருக்கிறான்? நாராயணன் எங்கிருக்கிறான்? என்று கேட்கிறார்களாம். பலவித இசைக்கருவிகளை எடுத்து கொட்டி முழக்கி ஆட்டம் போடுகிறார்களாம். இந்தக் கதியாயிற்று ஆயப்பாடி என்று வர்ணிக்கிறார்.
“ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பி நாரணனெங்குற்றா னென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்பாடியே”
- பெரியாழ்வார் திருமொழி-14
நந்தகோபன் மாளிகை, கண்ணனை யசோதை கட்டிவைத்திருந்த உரல், மருத மரங்களை முறித்த இடம், பூதனை, அகாசுரன், பகாசுரன் போன்றோரை கண்ணன் வதம் செய்த இடம், கண்ணன் மண்ணைத் தின்ற இடம் என, ஸ்ரீகிருஷ்ண லீலைகள் நடந்த இடங்களை இப்போதும் கோகுலத்தில் நாம் தரிசிக்கலாம்.