கேரளாவில் கோயில் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்ட யானை ஒன்று திடீரென மதம் பிடித்து மற்றொரு யானையை தாக்க முயற்சித்து கூட்டத்திற்குள் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
கேரளா மாநிலம், திருச்சூர் மாநிலத்தில் தற்போது ஏராளமான கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களின் முக்கிய பகுதியாக யானைகள் அழைத்து வரப்பட்டு சுவாமி சிலைகளைச் சுமந்து செல்லும் ’ஆராட்டு’ எனும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சூர் அருகே உள்ள தரக்கல் கோயிலில் ’உப்பச்சரம் சொல்லல்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக குருவாயூர் ரவிகிருஷ்ணன் என்ற யானை மற்றும் புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற யானை உள்ளிட்ட யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. நேற்று இரவு 10.30 மணி அளவில் விழாவின் முக்கிய நிகழ்வான ’அம்மா திருவடி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென குருவாயூர் ரவிகிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்து தறிகெட்டு ஓடத் துவங்கியது. அத்துடன் அருகில் இருந்தவர்களை யானை தாக்க முயற்சித்த போது, யானையின் பாகன் ஸ்ரீகுமார் (53) என்பவர் நூலிழையில் உயிர்தப்பினார். யானை திடீரென தறி கேட்டு ஓடியதால் அருகில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். இதில் பலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதனிடையே மதம் பிடித்த ரவிகிருஷ்ணன் யானை அருகில் இருந்த புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற யானையை தாக்கியது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் யானையும் ரவிகிருஷ்ணன் யானையை திரும்ப தாக்கத் துவங்கியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அர்ஜுனன் யானையின் பாகன் அந்த யானையை அங்கிருந்து அழைத்து சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடிய ரவிகிருஷ்ணன் யானையை, யானை பாகன்கள் சாந்தப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...