பகீர்; திருப்பதி நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது! பக்தர்கள் அதிர்ச்சி!


கூண்டில் சிக்கிய சிறுத்தை

திருப்பதி நடைபாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள நிலையில் அவற்றை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை தற்போது சிக்கியுள்ளது. இதன் மூலமாக சிக்கியுள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

திருப்பதி மலைப்பாதை

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். ஜூன் 24ம் தேதி கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த கெளசிக் என்ற 4 வயது சிறுவன் பெற்றோருடன் திருப்பதி நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது.

பக்தர்களும் காவல் துறையினரும் துரத்தியதால் அது சிறுவனை வனப்பகுதியில் விட்டுச் சென்றது. அந்த சிறுவன் மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். கௌசிக்கை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் அதனை பாக்கராபேட்டை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி சிறுத்தை தூக்கிச் சென்று கடித்துக் குதறியது. இந்த சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து அதிகாரிகள் பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இந்த கூண்டுகளில் 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டன.

இந்நிலையில், திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை, வனத்துறை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, அதனை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன.

மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தேவஸ்தானத்தின் கடமையாகும். இதற்காக, பக்தர்களை கும்பல், கும்பலாக அனுப்புவதோடு, அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் உடன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பைக்குகளுக்கு மலைப்பாதையில் அனுமதி எனும் புதிய நிபந்தனையையும் விதித்துள்ளது.

x