இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வைணவ தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா!


காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60 முதல் 70 வயது வரை உள்ள 1,000 பேரை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. ரூ.50 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.

இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 வாரங்களுக்கு 160 ஆன்மிக பக்தர்களை கட்டணமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயில், தேவராஜ சுவாமி கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், பாண்டவ தூதப் பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

பக்தர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் காலை உணவு மற்றும் மதிய உணவு ஆகிய வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளன. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் வளாகத்தில், வைணவத் திருத் தலங்களுக்கான ஒரு நாள் ஆன்மிக சுற்றுலாவை ஆட்சியர் கலைச் செல்வி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

x