திருச்சி : துடைப்பத்தால் அடித்து, உயிரோடு பாடையில் படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்; வினோத திருவிழா!


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் துடைப்பம், பாயால் ஒருவரை ஒருவர் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோதத் திருவிழா நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். ஆனால் கொரோனா பெருந்தொற்று, மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்களின் சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த 3ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்றது.

பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து கோட்டை மாரியம்மன் கோவிலில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் மாலையில் பாடை வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளைத் தூவினர். தலையில் முட்டையை அடிப்பது, ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள கிழிந்த பாயை எடுத்து வந்து அடிப்பது என பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தனது மகனுக்கு குழந்தை வரம் நிறைவேறியதால் அணியாப்பூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 78) என்பவர் நேர்த்திக்கடனாக இறந்தவர் போல் பாடையில் படுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினார்.

இந்த திருவிழாவில் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

x