புரட்டாசி முதல் சனிக்கிழமை: கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!


திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இலுப்பை தோப்பில்  அமைக்கப்பட்டுள்ள மொட்டை அடிப்பதற்காக  கூடாரத்தில் ஏராளமான பக்தர்கள்  மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்: கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சாமி கோயில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக் கோயிலுக்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதல் காலை முதல் ஏராளமான பக்தர்கள் இங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருவந்திபுரம் முகப்புப் பகுதியில் இலுப்பை தோப்பில் முடிக் காணிக்கை செலுத்துவதற்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கோயிலில் குவிந்து வருவதால் திருவந்திபுரம் மற்றும் கடலூர் - பாலூர் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x