தமிழகம் முழுவதும் வைணவ கோயிலுக்கான ஆன்மிக பயணம்: இன்று தொடங்கியது!


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் இன்று காலை துவங்கியது. அந்த வகையில், கும்பகோணம் வட்டத்தில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் முதற்கட்டமாக இன்று மேற்கொள்ளப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில், புரட்டாசி சனிக்கிழமை தோறும், 5 வைணவ பெருமாள் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி, சக்கரபாணி, திருச்சேறை சாரநாதப் பெருமாள், ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி, நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் ஆகிய 5 வைணவ பெருமாள் கோயில்களுக்கான ஆன்மிக பயணம் இன்று தொடங்கியது. இதில் 35 பக்தர்கள் பங்கேற்று 3 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி, எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் ஆன்மிக பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இதில், கும்பகோணம் மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் டி.கணேசன், கோவிலாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.சுதாகர், அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சிவசங்கரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆ. சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி 3 வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்ட 35 பக்தர்களும் மீண்டும் சாரங்கபாணி கோயிலை வந்தடைவார்கள். தொடர்ந்து, அடுத்தடுத்த புரட்டாசி சனிக்கிழமைகளில், இலவச ஆன்மிக பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள பக்தர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

x