திருப்பதியில் ஷாருக்கான், நயன்தாரா வழிபாடு!


நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தனர்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது. இதில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதற்கான புரமோஷன் பணிகளில் ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜவான் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அப்படத்தில் கதாநாயகன் ஷாருக்கான் மற்றும் கதாநாயகி நயன்தாரா ஆகியோர் முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் நடிகர் ஷாருக்கான் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவதேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். ஷாருக்கானுடன் அவரது மகளும் சென்றிருந்தார்.

அதேபோல நயன்தாராவும் தனது கணவர் விக்னேஷ்சிவனுடன் சென்றிருந்தார். வேட்டி சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார்.

தரிசனம் முடிந்து வெளியே வந்தவர்களை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். எனவே அவர்கள் விரைவாகச் சென்று கார்களில் ஏறி வேகமாக புறப்பட்டு சென்றனர்.

x