யுத்தத்தினால் ஏற்படுகிற பாதிப்புகள் ஏராளம்.
யுத்தத்தில் இறங்குகிற நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாட்டு வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகிற பாதிப்புகள் கணக்கிட இயலாதவை.
பெரிய பெரிய நகரங்களில் முன்னாள் ராணுவ வீரர்களை வரவழைத்து ஏதேனும் விழா நடந்தால், அங்கு சென்று பாருங்கள். விழாவில் கலந்து கொண்டிருக்கிற வீரர்களில் எவரேனும் ஒரு சிலருக்குக் கை இல்லாமல், கால் இல்லாமல்... இப்படி உடல் உறுப்புகளைப் பறி கொடுத்தமையைக் காண முடியும். அதைப்பற்றி அவர்களிடம் மெள்ள விசாரித்தால், அவர்கள் சொல்கிற சோகக் கதை கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைக்கும். எப்பேர்ப்பட்ட சோகம் இது!
இறைவன் வழங்கிய போற்றுதலுக்குரிய இந்த உடலை, யுத்தத்திலா நாம் சிதைத்துக் கொள்ள வேண்டும்?
அர்ஜுனன் சொன்னதை நினைவுபடுத்தி ‘யுத்தமே நமக்கு வேண்டாம்’ என்கிற மகா பெரியவா அடுத்துச் சொல்கிறார்:
‘‘இந்த சரீரம் (உடல்) வீணாகப் போய்விட்டால்... அதாவது பழுது ஏற்பட்டு விட்டால் காலம் முழுக்க பகவான் நாமாவைச் சொல்ல முடியாமல் போய்விடும். கைகளுக்கோ அல்லது கால்களுக்கோ ஏதேனும் பழுது ஏற்பட்டு விட்டால், ஆலயங்களில் வலம் வர வேண்டும்... நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால்கூட முடியாது. ஆகவே, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல் இந்த உடல் நன்றாக இருக்கிறபோதே தர்மம் என்கிற பயிரை நிறைய விளைவித்துக் கொள்ள வேண்டும்.
‘தர்ம காரியங்களை நிறைய செய்து எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. அதைப் பின்பற்றி வாழ ஒவ்வொருவரும் முற்பட வேண்டும்.’’
புரிகிறதா, மகான் என்ன சொல்ல வருகிறார் என்று?
உடல் நன்றாக இருக்கிறபோதே மனதையும் பக்குவப்படுத்திக் கொள். பக்குவப்பட்ட மனதால்தான் நற்காரியங்களைச் செய்ய முடியும். எனவே, உடலும் மனமும் நன்றாக இருக்கும்போது பக்தியோடும், பிறருக்கும் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தோடும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் பெரியவா.
இதைத் தவிர நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம் பற்றியும் மகான் சொல்கிறார்.
‘நமக்குள் என்ன யுத்தம்? நாம் பிறருடன்தானே யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்’ என்று யோசிக்கிறீர்களா?
மகான் சொல்கிறார் ...
‘‘ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு சரீரத்துக்குள்ளும் ஒவ்வொரு நாளும் தேவாசுர யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.’’
மகா பெரியவா சொல்லக் கூடிய வார்த்தைகள் இவை. சரி, அதென்ன தேவாசுர யுத்தம்? முதலில், அதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு பிரிவினர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். விண்ணுலகவாசிகளான இவர்களுக்கு இடையே அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். புராணங்களில் இதுபற்றி நிறைய படித்திருக்கிறோம்.
தேவர்கள் என்பவர்கள் நல்லவர்கள்; அசுரர்கள் என்பவர்கள் கெட்டவர்கள்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ‘தேவாசுர யுத்தம்’ எப்படி அடிக்கடி வெளியே நடந்து கொண்டிருக்கிறதோ, அதுபோல் ஒவ்வொருவருடைய மனதுக்குள்ளும் இந்த தேவாசுர யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கருணைக் கடலான காஞ்சி தெய்வம் சொல்கிறார்:
‘‘உபநிஷத்துகளில் தேவாசுர யுத்தம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தேவாசுரர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளத் தயாராக எதிரும் புதிருமாக நிற்கிறார்கள் என்று வருகிறது. இந்த உபநிஷத் வரிகளுக்கு ஆதி சங்கரர் பாஷ்யம் (விளக்கவுரை) பண்ணும்போது இந்த தேவாசுரர்கள் நம் மனதுக்குள் இருப்பவர்கள் என்று குறிப்பிடுகிறார். தவிர, எங்கே யுத்தம் என்றால் நித்தமும் நம் மனசில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார். ஆக, ஆதி சங்கரர் சொல்கிற இந்தக் குறிப்பிட்ட தேவாசுர யுத்தம் புராணத்தில் சொல்லும்படியான யுத்தம் இல்லை.
உபநிஷத்துகளிலே சொல்லும் தேவாசுர யுத்தம் என்பது நமக்குள்ளேயும் இருக்கிறது. புரியும்படி சொல்கிறேன்... ஒரு பக்கம் யாரோ நல்ல காரியங்களைப் பண்ணு என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இன்னொரு பக்கம் கெட்ட காரியங்களைப் பண்ணு என்று யாரோ தூண்டி விடுகிற மாதிரி இருக்கிறது. இப்படிப்பட்ட கெட்ட காரியங்களுக்கும் நல்ல காரியங்களுக்கும் இடையே நம் மனதில் தினமும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல காரியங்கள்தான் தேவர்கள். கெட்ட காரியங்கள்தான் அசுரர்கள். உள்ளுக்குள்ளே நடக்கிற இந்த மறைமுகப் போரில் முக்கால்வாசி நாட்களில் அசுரர்கள்தான் ஜெயிக்கிறார்கள். என்றைக்கோ தேவர்கள் ஜெயிக்கிறார்கள்.
தேவர்கள் ஜெயித்தால் நமக்கு ஆனந்தமாக இருக்கி றது. காரணம், உள்ளுக்குள் இருக்கிற நற்சிந்தனைகள் வலுப்பெறுகின்றன. ஆனால், அசுரர்களே ஜெயிக்க வேண்டும் என்று முதலிலே எண்ணுகிறோம். ஆனால், அசுரர்கள் ஜெயித்த பிறகு துக்கம் வருகிறது. ‘நம் புத்தி வீணாய்ப் போச்சே... யோசிக்காமல் விட்டு விட்டோமே’ என்று பிற்பாடு அழுகிறோம்.’’
பெரியவா சொன்னவை எத்தனை சத்தியமான வார்த்தைகள் !
மகான் சொன்னதை மனதில் வைத்து யோசியுங்கள். இந்த மனம் நல்லனவற்றை விட கெட்டதையே அதிகம் நாடுகிறது.
இதுதான் இறைவனின் படைப்பு! கண்களுக்கு நேரே நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கிற மனம், நல்லதை விடுத்து கெட்ட தில் கவனம் செலுத்துவது இன்றைக்கு அதிகம் பார்க்கிற ஒன்று.
ஏன் இப்படி? நல்லனவற்றில் ஏன் நம் கவனம் செல்ல மறுக்கிறது?
இதற்கு ஒரே பதில் ... சம்ஸ்காரங்கள்! நம் செயல்கள் அனைத்துக்கும் சம்ஸ்காரங்களே காரணம்.
சம்ஸ்காரம் என்றால் ‘நன்றாக ஆக்குவது’, ‘முறைப் படுத்துவது’ என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
இதுபற்றி மகா பெரியவா நிறைய சொல்லி இருக்கிறார். ஒருவரது செயல்களுக்கு சம்ஸ்காரங்களே காரணமாக அமைகின்றன.
ஒருவரைப் பார்க்கிறோம். ‘ஆகா... அவனை மாதிரி ஒரு உத்தமன் கிடையாது. எவ்ளோ பெரிய தர்மாத்மா’ என்கிறோம். அதே வேளையில் இன்னொருவனைப் பார்க்கிறோம். ‘பாவி... இவனைப் போல ஒரு அயோக்கி யனைப் பார்க்கவே முடியாது. அத்தனையும் விஷம்’ என்கிறோம். ஆக, நல்லவன், கெட்டவன் ஆகிய இருவரும் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லவன், கெட்டவன் என்கிற குணங்கள் எப்படி அமைகின்றன?
மனிதன் கொண்டிருக்கிற எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன. அந்தச் செயல்கள் பழக்கங்கள் ஆகின்றன. பழக்கங்களே குணங்களாக மாறுகின்றன. இதைத்தான் விதி என்று வேறு வார்த்தையில் சொல்கிறோம். முன் ஜன்மத்தில் அவரவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எல்லாமே நடக்கின்றன.
மகாபாரதத்தில் துரியோதனன் சொல்வான்: ‘எது நல் லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், தீமைகள் செய்வதில்தான் எனக்கு விருப்பம் அதிகம் இருக்கிறது. மற்றவர்களுக்குத் தீமை செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லையே?’
துரியோதனனே ஆதங்கப்பட்டுத்தான் இதைச் சொல்கிறான்.
துரியோதனன் ஏன் கெட்டவனாக இருக்கிறான்? இதற்கான பதில் ... சம்ஸ்காரம்.
சம்ஸ்காரம்தான் நல்லவனையும் உருவாக்குகிறது; கெட்டவனையும் தாராளமாக நடமாட விடுகிறது.
நாம் நஷ்டப்பட்டாலும் மற்றவர்களை சந்தோஷப் படுத்திப் பார்க்க வேண்டும். அதில் கிடைக்கிற ஆனந்தமே அலாதி!
இதை விளக்குவதற்காக மகா பெரியவா ஒரு சிறு நிகழ்வைச் சொல்வார்:
‘‘இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. முதல் குழந்தையின் கையில் இருக்கும் வாழைப்பழத்தை இரண்டாவது குழந்தை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு விட்டது. வாழைப்பழத்தை இழக்க நேரிட்ட முதல் குழந்தை பரிதாபத்துடன் அழ ஆரம்பித்தது. அப்போது அங்கே மூன்றாவதாக ஒரு குழந்தை வந்தது. அழுகிற முதல் குழந்தையைப் பார்த்ததும் தன் கையில் இருக்கிற வாழைப்பழத்தை மூன்றாவது குழந்தை கொடுத்து விட்டது. தன் கையிலும் ஒரு வாழைப்பழம் இருக்கிறது என்கிற சந்தோஷம் பழத்தைப் பிடுங்கிக் கொண்ட இரண்டாவது குழந்தைக்கு இருக்கும் என்றாலும், அதனுடைய சந்தோஷத்தை விடத் தன் கையில் இருக்கும் பழத்தை முதல் குழந்தைக்குக் கொடுத்த மூன்றாவது குழந்தைக்கு இருக்கும் ஆனந்தமும் சந்தோஷமும்தான் அதிகம்!’’
இத்தகைய மன நிலை வாய்க்கப் பெற்றவர்கள்தான் தெய்வத்தின் அனுக்ரஹத்துக்குப் பாத்திரமாவார்கள்.
அழுகிறவர்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மை யான பக்தி!
(ஆனந்தம் தொடரும்...)
சென்ற அத்தியாயத்தை வாசிக்க:
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 51