செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அம்மன் அருளைப் பெறுவதற்காக பக்தர்கள், முழுக்க முழுக்க கத்திகள் பொருத்தப்பட்ட ஏணியின் மீது ஏறிச் சென்று வழிபாடு செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 14 வது ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில், கத்திகள் பொருத்தப்பட்ட ஏணி மீது ஏறிச் சென்று அம்மனை வழிபடும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்காக கோயிலின் எதிரில் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, 11 படிகள் கொண்ட கத்திகளால் செய்யப்பட்ட ஏணி வைக்கப்பட்டது. அதன் ஒவ்வொரு படியிலும் நீளமான கத்தி இணைக்கப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் ஒவ்வொரு படியாக ஏறி உச்சியை அடைந்தார்கள்.
உச்சியை அடைந்ததும் தலை குனிந்து வணங்கி கீழே இருக்கும் மக்களை நோக்கி பூக்கள், இனிப்புகள் மற்றும் பழங்களை அங்கிருந்து வீசினார்கள். ஒரு கயிறு மூலமாக கூடை உச்சியில் இருக்கக்கூடிய நபரிடம் அனுப்பப்பட்டு அவைகள் கொடுக்கப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் ஏறி வழிபாடு செய்தனர்.
இந்த திருவிழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பங்குபெற்று கடவுளை வழிபட்டனர்.