திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் சுமார் 100 கிலோ ஆட்டுக்கறி மற்றும் சாதம் சமைக்கப்பட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாகவே ஒரு வினோத பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையில் பெண்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. விழாவை ஒட்டி ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா நேற்று இரவு துவங்கியது.
நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு துவங்கப்பட்டது. பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு, ஒரே இடத்தில் சமைக்கப்பட்டன. சுமார் 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது.
இந்த கறி விருந்தையொட்டி இன்று காலை அங்கு கூடியிருந்த சுமார் 3,000 மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கறி விருந்தில் நத்தம், உண்ணாம்பட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் விடிய விடிய சமையல் நடைபெற்றதை வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.